சூப்பர்மேன் Vs சக்திமான் – பகுதி 4

டாக்டர் ஜக்காலால் தாக்கப்பட்டு கீழே விழுந்த சூப்பர்மேனை சக்தி வாய்ந்த ஒன்று வானத்தை நோக்கி வீசியது. வானத்தை நோக்கி வீசப்பட்ட சூப்பர்மேன் மேகக்கூட்டத்தை தாண்டி சென்றார். சூரிய ஒளி அவர்மேல் விழ தொடங்கியதும் இழந்த சக்தியை மீள பெற்று கண் விழித்தார். தன்னை தாக்கியது எதுவென்று தேட தொடங்கினார்.

“நீ யார்? டாக்டர் ஜக்கால் ஷிப்ல உனக்கு என்ன வேலை?”

மேகக்கூட்டத்திற்கு நடுவே இருந்து கனீரென ஒலித்தது ஒரு குரல். மேகங்கள் விலக தொடங்கியபோது சூரிய ஒளியில் அந்த சக்கரம் கண்களை கூசியது. கம்பீரமான தோற்றத்தோடு சக்திமான் சூப்பர்மேன் முன்னே தோன்றினார்.

”நீ யாரு?” சக்திமான் கேட்டார்.

“அதையேதான் நானும் கேக்கறேன்” என்றபடி வேகமாக பாய்ந்து வந்தார் சூப்பர்மேன்.

சூப்பர்மேனும், சக்திமானும் வேகமாக வந்து ஒருவரை ஒருவர் தாக்கினார்கள். அவர்கள் மோதிக் கொண்டதில் அணுகுண்டு வெடித்தது போல மேகக் கூட்டங்கள் நாலா திசையிலும் சிதறின. சூப்பர்மேன் சக்திமானை கீழே தள்ளினார். பிறகு வேகமாக அவரை நோக்கி சென்றார் சூப்பர்மேன். ஆனால் சக்திமானை காணவில்லை. சூப்பர்மேன் சுற்றும் முற்றும் பார்த்தபோது மேலிருந்து திடீரென வந்து தாக்கினார் சக்திமான். அவர் தாக்கிய வேகத்தில் மின்னெலென பூமியை நோக்கி சென்ற சூப்பர்மேன் சரிஸ்கா புலிகள் காப்பகத்தின் காட்டு மரங்களில் மோதி உடைத்துக் கொண்டு எறிக்கல் வீழ்வதுபோல காட்டின் நடுவே இருந்த குளத்தில் வீழ்ந்தார். நாலா பக்கமும் தண்ணீர் சிதறி தெறிக்கவும், நீர் அருந்தி கொண்டிருந்த காட்டு விலங்குகள் அந்த சத்தம் கேட்டு பீதியில் சிதறி ஓடின. சற்று நேரம் பெரும் அமைதி நிலவியது. திடீரென தண்ணீரை கிழித்துக் கொண்டு ராக்கெட் போல வானத்தை நோக்கி சீறினார் சூப்பர்மேன்.

சக்திமான் வானத்திலிருந்தபடியே சூப்பர்மேனை தேடிக் கொண்டிருந்தார். திடீரென பக்கவாட்டிலிருந்து பயங்கரமாக வந்து மோதி தள்ளினார் சூப்பர்மேன். இதனால் நிலைக்குலைந்த சக்திமான் ஜெய்ப்பூர் தாண்டியுள்ள தாரக் கோட்டையின் அருகே உள்ள மலைப்பகுதியில் மோதினார். சூப்பர்மேன் மோதிய வேகத்தை சக்திமானால் கட்டுப்படுத்த முடியாததால் குளத்தில் வீசப்பட்ட தவளைக்கல் போல தரையில் மோதி மோதி பந்து போல தவ்வி தவ்வி சில மீட்டர்கள் தூரம் சென்று விழுந்தார். தட்டுத்தடுமாறி எழுந்து நின்றார் சக்திமான். சூரியஒளி கண்ணை கூசியது. அப்போது ஒரு நிழல் தன்மேல் படர்வதை சக்திமான் உணர்ந்தார். வானத்திலிருந்து வந்திறங்கிய சூப்பர்மேனின் நிழல் சக்திமான் மேல் விழுந்துக் கொண்டிருந்தது.

சூப்பர்மேன் முகத்தில் அப்படி ஒரு கடுமை. ”உன்னை போல நிறைய பேரை பாத்துட்டேன்.. உண்மையை சொல்லு உங்களுக்கு க்ரிப்டானைட் எங்கிருந்து கிடைச்சது”

”நீ எதை பத்தி கேக்குறேன்னு புரியலை.. நீ ரொம்ப ஆபத்தானவனா தெரியிற”

“ஆமா.. நான் ஆபத்தானவன்தான்.. அதுனால உண்மையை சொல்லிடுறது உனக்கு நல்லது”

சூப்பர்மேனின் பேச்சு சக்திமானுக்கு புரியவில்லை. அதேசமயம் தன்னை நிலைக்குலைய செய்தவனுடன் விவாதம் செய்வது உதவாது என நினைத்தார் சக்திமான். சட்டென பாய்ந்து சூப்பர்மேனின் கழுத்தை பிடித்த சக்திமான் மென்னியை முறிக்க தொடங்கியவாறே மிகவேகமாக வானில் சூப்பர்மேனை இழுத்து செல்ல தொடங்கினார். புயல்வேகத்தில் பலநூறு கிலோமீட்டர்களுக்கு நொடிப்பொழுதில் சக்திமான் இழுந்து சென்றதால் இப்போது சூப்பர்மேன் நிலைக்குலைந்தார். ஒருவழியாக சுதாரித்துக்கொண்டு சட்டென திரும்பி சக்திமானின் பிடியிலிருந்து விலகி பயங்கரமாக சக்திமானை உதைத்தார் சூப்பர்மேன். பிறகு தனது கடைசி அஸ்திரத்தை பயன்படுத்த முடிவெடுத்த சூப்பர்மேன் கண்கள் கனல் போல சிவக்க தொடங்கியது. சக்திமானை நோக்கி தனது கண்களில் இருந்து சிவப்பு நிற லேசரை உமிழ்ந்தார். மின்னல் வேகத்தில் வந்த அந்த கதிலிரிலிருந்து சக்திமான் நூல் இழையில் நழுவினார்.

சக்திமானை கடந்து சென்ற அந்த லேசர் கதிர் அந்த வழியே சென்றுக் கொண்டிருந்த விமானத்தை தாக்கியது. விமானத்தின் ஒரு பக்க எஞ்சினை அது தாக்கியதால் விமானம் செயல் இழந்து பூமியை நோக்கி விழ தொடங்கியது. விமானத்தின் உள்ளே பயணிகள் அனைவரும் பயத்தில் அலறிக்கொண்டிருந்தனர். கீதாவும், லூயிஸ் லேனும் என்ன நடக்கிறது என்பது புரியாமல் குழப்பத்தில் இருந்தனர்.

விமானிகள் விமானத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டனர். “கண்ட்ரோல் ரூம்.. கண்ட்ரோல் ரூம்.. விமானத்தை ஏதோ தாக்கிருக்கு. வலதுபக்க எஞ்சின் பத்தி எரியுது.. நாங்க கட்டுப்பாட்டை இழந்துட்டோம்”

விமானம் வீழ்வதை பார்த்ததும் சக்திமானும், சூப்பர்மேனும் அதை நோக்கி விரைந்தனர்.

டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறை ஸ்தம்பித்தது.

“ஹலோ.. ஹலோ.. பைலட்ஸ்.. நாங்க ஃபயர் செர்வீஸை ரெடி பண்றோம்.. உங்களால விமானத்தை தரையிறக்க முடியுமா?” கட்டுப்பாட்டு அறை உதவியாளர் விமானிகளிடம் பேசிக் கொண்டிருக்க, மொத்த கட்டுப்பாட்டு அறை ஊழியர்களும் வானத்தை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களை விலக்கி கொண்டு வந்து கட்டுப்பாட்டு அறை அதிகாரியும் வானத்தை பார்த்தார். வானத்திலிருந்து விமானம் பூமியை நோக்கி செங்குத்தாக வந்து கொண்டிருந்தது. கட்டுப்பாட்டு அறையில் பலர் “அது சக்திமான்.. சக்திமான் வந்துட்டார்” என வானத்தை பார்த்து ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.ஆனால் அவர்கள் இன்னொன்றை பார்க்க மறந்து விட்டார்கள். விமானத்தின் பின்னால் ஏதோ வருவதை பார்த்தார் கட்டுப்பாட்டு அதிகாரி. அதிர்ச்சியில் கத்த தொடங்கினார்.

”விமானத்துக்கு பின்னாடி பாருங்க… பெரிய பறவை மாதிரி ஏதோ வருது!”

”இல்ல.. அது சூப்பர்மேன்” சத்தம் கேட்ட திசையை நோக்கி திரும்பியபோது அமெரிக்க வெளியுறவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூலாக நின்றுக் கொண்டிருந்தார்.

வானத்தில் விமானத்தை நெருங்கிய இருவரும் விமானத்தின் இறைக்கைகளில் ஆளுக்கு ஒன்றை பிடித்துக்கொண்டு செங்குத்தாக சென்ற விமானத்தை கிடைமட்டமாக உயர்த்தினார்கள். விமானத்தின் ஜன்னல் வழியாக கீதா சூப்பர்மேனை பார்த்தாள். அவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன. அப்போது அருகிலிருந்த லூயிஸ் லேன் கீதாவின் தோள்பட்டையில் தட்டி அழைத்து மறுபக்க ஜன்னலை ஆச்சர்யத்தோடு சுட்டிக்காட்டினாள். அந்த பக்கம் சக்திமான் எஞ்சினை தாங்கி கொண்டிருந்தார்.

புகையை கக்கிக்கொண்டு வானத்திலிருந்து வரும் அந்த விமானத்தை பார்த்ததும் டெல்லி விமான நிலைய தீயணைப்பு வண்டிகளின் சத்தம் கேட்கத் தொடங்கியது. வானத்திலிருந்து விமான தளத்தை நோக்கி வந்துக் கொண்டிருந்த அந்த விமானம் சாலைகளில் உள்ள மக்களின் கண்களுக்கும் தெரிந்தது. அதை பார்த்தப்படி மக்கள் நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போக்குவரத்து ஸ்தம்பித்ததால் மேம்பாலம் அருகே பைக்கில் கடுப்பாக உட்கார்ந்திருந்த டிவி கேமராமேன் விமானம் விழுவதை பார்த்ததும் உடனே கேமராவை எடுத்து அதை ரெக்கார்ட் செய்ய தொடங்கினான்.

ஒரு வழியாக விமானம் மெல்ல இறங்கு தளத்தில் வந்து நின்றதும் காற்று வேகமாக சுழன்றடித்தது. மின்னல் வெட்டுவது போல சில ஒளிக்கீற்றுகள் தோன்றின. பிறகு அந்த இடம் அமைதியானது. கதவு திறந்து பயணிகள் வெளியே வர தொடங்கினர். கீதாவும், லூயிஸ் லேனும் வெளியே வந்த மாத்திரத்தில் சக்திமானையும், சூப்பர்மேனையும் தேடினார்கள். ஆனால் அங்கு அவர்கள் இல்லை.

தொடரும்

#Yugen

Leave a comment