சூப்பர்மேன் Vs சக்திமான் – பகுதி 6

நள்ளிரவு நேரம். வானில் நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருக்க அவற்றின் நடுவே யார் கண்ணுக்கும் அகப்படாமல் நகர்ந்து கொண்டிருந்தது ஒரு உருவம். கீழே மலை ஒன்றின் உச்சியில் இருந்த குகையின் முகப்பில் நின்றபடி அந்த உருவத்தை உற்று நோக்கி கொண்டிருந்தார் சக்திமான். மெல்ல மலைக்கு அருகே நெருங்கியதும் அந்த உருவம் சூப்பர்மேன் என தெரிய வந்தது.

”ரெண்டு பேருமே தப்பா புரிஞ்சிகிட்டு எதிரியை விட்டுட்டோம்” சூப்பர்மேன் குரலில் ஒரு வருத்தம்.

”டாக்டர் ஜக்கால் இந்த மாதிரியான வேலைகளை பண்றது இது ஒன்னும் புதுசு இல்ல. அவனை பத்தி நீ கவலைப்பட வேணாம்” நட்புடன் பேசினார் சக்திமான்.

பறந்து கொண்டிருந்த சூப்பர்மேன் தரைமீது இறங்கி குகையின் அருகே இருந்த பாறையில் அமர்ந்தார்.

”நான் கவலைப்படுறது அந்த பைத்தியக்கார டாக்டரை பத்தி மட்டுமில்ல. அவன்கிட்ட கிர்ப்டோனைட் படிகம் இருக்கத பாத்தேன். அது என்னோட கிரகத்தை சேர்ந்தது”

“உன் கிரகமா? நீ ஒரு வேற்றுகிரகவாசியா?” சக்திமான் கேள்விக்கு பதில் அளிக்காமல் சூப்பர் மேன் அமைதியாக இருந்தார்.

சக்திமான் தொடர்ந்தார் “நீ உன்னோட கிரகத்துக்கு போறதுக்கு அந்த படிகம் தேவையா?”

“இல்ல.. எனக்குன்னு எந்த கிரகமும் இல்ல.. க்ரிப்டான் அழிஞ்சிட்டு.. அதோட கடைசியா எஞ்சின உயிரினம் நான் மட்டும்தான்” என்றபடி சூப்பர்மேன் வானில் மின்னும் நட்சத்திரங்களை நோக்கினார். அவரை ஆறுதல் படுத்த அவர் அருகில் வந்து தோல் மீது கை வைத்தார் சக்திமான்.

”கவலைப்படாத க்ளார்க் இந்த உலகத்துல வாழ்றதுக்கு நிறையவே இடம் இருக்கு”

சூப்பர்மேன் பேச்சை மாற்ற முயன்றார் “சரி சொல்லுங்க கங்காதர். நீங்க ஒரு துறவி. ஆனா சூப்பர்ஹீரோவா மாறுனது எப்படி?”

“அதைவிடு க்ளார்க். அந்த க்ரிப்டோனியம் படிகத்தால உலகத்துக்கு ஏதாவது ஆபத்து இருக்கா?” சக்திமான் க்ரிப்டோனைட் குறித்த சிந்தனையிலேயே இருந்தார்.

“உலகத்துக்கு ஆபத்து இல்ல.. எனக்கு! அது என் பக்கத்துல இருந்தா என் சக்தி குறைஞ்சிடும். சாதாரண மனுஷன் கூட என்னை அடிச்சிடுவான். இந்த ரகசியம் ஒருத்தனுக்கு ரொம்ப நல்லா தெரியும்! அவனுக்கும் டாக்டர் ஜக்காலுக்கும் சம்பந்தம் இருக்கும்னு நினைக்கிறேன்”

“யார் அவன்?”

“லெக்ஸ் லூதர்”

மும்பை துறைமுக பகுதி

மும்பையின் பரபரப்பான துறைமுகத்திற்கு சற்றுத் தொலைவில் நங்கூரமிட்டு நின்றது லெக்ஸ் கார்ப்ஸ் நிறுவனத்தின் கப்பல். கப்பலின் உள்ளே பெரும் ஆராய்ச்சி கூடமே செயல்பட்டுக் கொண்டிருந்தது. அங்கு ஒரு அறையில் டிவி பார்த்தபடி அமர்ந்திருந்தான் லெக்ஸ் லூதர். டிவியில் சக்திமான், சூப்பர்மேன் விமானத்தை காப்பாற்றிய செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதை பார்த்ததும் வேகமாக எழுந்து வெளியே சென்றான் லூதர்.

”ஹே.. டாக்டர்! இந்தியாவுக்கு இன்னொரு சூப்பர்ஹீரோவும் கிடைச்சிட்டான் போல இருக்கே” என்றான் லெக்ஸ்.

அந்த ஆய்வகத்தில் சுமார் 20 அடி உயரத்திற்கு பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த எந்திரத்தின் உள்ளிருந்து வெளியே எட்டி பார்த்தான் டாக்டர் ஜக்கால்.

”சூப்பர்ஹீரோக்கள் அழியா பிறவிகள்னு மக்கள் நினைச்சிட்டுருக்காங்க லெக்ஸ். அவங்க எல்லாம் சீக்கிரமே ஏமாற போறாங்க.. அப்ப அவங்க புரிஞ்சிப்பாங்க.. அழியாதது ஒன்னே ஒன்னுதான்… பவர்ர்ர்ர்…”

டாக்டரின் உணர்ச்சிவசமான பேச்சு லெக்ஸுக்கு எந்த விதத்திலும் பிடிக்கவில்லை. இருந்தாலும் சமாளித்துக் கொண்டான்!

”சரி டாக்டர்.. அந்த சக்திமான் எப்படிப்பட்ட ஆளு. ரெண்டு பேரும் விமானத்தை சேர்ந்து காப்பாத்துறதை பாத்தா தெரிஞ்சவங்க போல இருக்கே!” ஆர்வமாக கேட்டான் லெக்ஸ்.

”அவங்க தெரிஞ்சவங்களா இருக்க வாய்ப்பில்ல. ஆனா ஒரு விஷயத்துல ஒத்து போறாங்க. ரெண்டு பேருமே மக்களை காப்பாத்துற அரைவேக்காடுங்க.. அதுவும் அந்த சக்திமான் இருக்கானே..” டாக்டர் கண்கள் கோபத்தில் கொப்பளித்தன. “பவர்ர்ர்ர்” என்று கத்திக் கொண்டு எதிரே இருந்த உலோக பலகையில் ஒரு குத்து விட்டார்.

அப்போது லெக்ஸ் கடிகாரத்தில் இருந்த பிரத்யேக அலாரம் ஒலித்தது. உடனே பேச்சை நிறுத்தி விட்டு வேகமாக தனது அறைக்கு சென்றான். அங்குள்ள தனது கணினியை ஆன் செய்தான். அதில் ஸ்டார் முத்திரை ஒன்று தோன்றியது. அதன் கீழே Lider என்ற வார்த்தை எழுதப்பட்டிருந்தது. பிறகு தானாக சில கோப்புகள் டௌன்லோட் ஆகின. கோப்புகளை திறந்து பார்த்த லெக்ஸின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன.

டெல்லி, இந்திய தலைநகரம்

டெல்லியின் பிரதான சாலை ஒன்றின் ஓரமாக ஒதுங்கி நின்றது சிஐஏ அதிகாரி ஆலனின் கார். பெஞ்சமின் அங்கிருந்த காஃபி பார் ஒன்றிலிருந்து ஸ்ட்ரா போட்ட காபி கோப்பைகளை வாங்கி வந்து காரில் அமர்ந்தான். சூடான காபியை குடித்ததும் ஆலனின் மூளைக்கு ஒரு புத்துணர்ச்சி பிறந்தது. பெஞ்சமின் காரை ஓட்டத் தொடங்கினான்.

”Lider.. யார் இவனுக.. இந்த மாதிரி பயங்கரவாத கும்பல் பேர் கூட கேள்விப்பட்ட மாதிரி இல்லையே!”

”சார்.. லிடர்னா செர்பியன் மொழிப்படி லீடர்.. அதாவது தலைவன்னு வருது”

”செர்பியன்ஸா.. அவங்களுக்கு இந்தியால என்ன வேலை? யார் நம்ம சர்வரை ஹேக் பண்ணுன்னாங்கன்னு தெரிஞ்சதா?”

”நம்ம டெக்னீஷியன்ஸ் ட்ரேஸ் பண்ணிட்டு இருக்காங்க சார். கண்டுபிடிச்சா எனி டைம் சாட்டிலைட் போன் மூலமா மட்டும் சொல்ல சொல்லி இருக்கேன்”

“நம்ம சேட்டிலைடஸ் ஹேக் பண்ண முடியாத அளவுக்கு பாதுகாப்பா இருக்கா?”

“யாரலையும் ஹேக் பண்ண முடியாது.. அப்புறம் ஒரு சின்ன சந்தேகம்.. கேக்காலாமா?” தயங்கினான் பெஞ்சமின்.

“குடாக்குத்தனமான சந்தேகமா இல்லாம இருந்தா சரி”

”நீங்க ஒரு உயர் அதிகாரியா இருக்கும்போது.. இந்த ரிப்போர்டர்ஸை விசாரிக்க சின்ன லெவல் அதிகாரிகளை அனுப்புனா போதுமே! ஏன் நீங்களே மெனக்கெடனும்”

“ஒன்னு சொல்லவா பென். எந்த ஒரு விஷயத்துலயும் எது பிரச்சினையா இருக்கும்னு தோணுதோ அதை நானே நேரடியா போய் விசாரிச்சாதான் எனக்கு திருப்தியா இருக்கும். இந்த விவகாரத்துல செர்பியன்ஸ் பத்தின ஆர்வத்தை விட அந்த புது ஆளு சக்திமான் பத்தி எனக்கு கொஞ்சம் ஆர்வம் அதிகமாவே இருக்கு..”

ஆலன் சொல்வதையே பென் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு சாலை பக்கம் கவனத்தை திருப்பவும், சரியாக ஒரு ஆள் குறுக்கே வராவும் சடார் என கார் அந்த மனிதனை மோதியது. சுதாரித்த பென் உடனடியாக ப்ரேக்கை அழுத்தினான்.

“என்ன காரியம் பண்ணிட்ட பென்..” கண்டித்தபடி ஆலன் காரிலிருந்து வேகமாக வெளியேறி விழுந்தவரை தூக்கினார். பென்னும் ஒருவழியாக பதட்டத்திலிருந்து விடுபட்டு வெளியே வந்தான். கீழே விழுந்தவர் தன் கண்ணாடியை சரிசெய்து கொண்டு நிதானம் அடைந்தார்.

”சாரி சார்.. உங்களுக்கு மோசமா எதுவும் அடிபடலையே?” நலம் விசாரித்தான் பென்.

”இது என்ன பிரமாதம்.. நான் மும்பையில் இருக்கும்போது ஒரு பெரிய லாரி என் மேல மோத வந்துச்சா.. கரெக்டா நான் நடுரோட்டுல..” என அந்த மனிதர் தன் கதாகாலட்ஷேபத்தை தொடங்கவும் ஆலன் அவரை இடைமறித்தார்.

”உங்க பேரு என்ன சார்? உங்கள நாங்க எங்கயாவது ட்ராப் பண்ணனுமா?”

”என் பேரா.. என் பேரு.. பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்கர்நாத் சாஸ்திரி. நான் ஆஜ் கி ஆவாஸ்ல போட்டோகிராபரா இருக்கேன்” என்றபடி தனது கழுத்தில் மாட்டியிருந்த கொடாக் கேமராவை காட்டினார்.

ஆஜ் கி ஆவாஸ் பெயரை கேட்டதும் ஆலனுக்கு பொறி தட்டியது.

“கீதா விஸ்வாஸ், லூயிஸ் லேன் கூடதான் நீங்களும் வந்தீங்களா?”

“இல்ல.. அவங்க என்னை விட்டுட்டு முதல்லயே வந்துட்டாங்க. நான் இப்போதான் வந்தேன்”

“சரி வாங்க நானே அவங்கக்கிட்ட உங்களை அழைச்சிட்டு போறேன்!” என்றபடி கங்காதரை காரில் அழைத்துக் கொண்டு புறப்பட்டார் ஆலன்.

தி மேனர், டெல்லி

”என்ன சொல்றீங்க கங்காதர் காணாம போயிட்டாரா?” அதிர்ச்சியாக கேட்டாள் லூயிஸ்.

“ஆமா.. ரெண்டு பேரும் ஒன்னாதான் வந்தோம். ஏர்போர்ட்ல இருந்து வெளியே வந்தப்போ அவரை காணோம்” என்றான் க்ளார்க்.

“இதுக்குதான் எங்க கூடவே வாங்கன்னு சொன்னோம். சரி பரவாயில்ல. ஹோட்டல் அட்ரஸ் அவருக்கு தெரியும். எப்படியும் தேடி கண்டுபிடிச்சி வந்துடுவார்” கீதா க்ளார்க்கை ஆறுதல் படுத்த முயன்றாள்.

”அவர் விவரம் இல்லாதவரா இருக்கார். ஏதாவது போக்கிரி கும்பல்கிட்ட மாட்டிக்கிட்டார்னா என்ன பண்றது” பாவமாக சொன்னாள் லூயிஸ்.

”அப்படி அவரை யாராவது பிடிச்சிட்டு போனா ஆபத்து அவங்களுக்குதான். பேசியே ஆளை காலி பண்ணிடுவார். நாம ஜனாதிபதி மாளிகைக்கு கிளம்பலாம். இன்னைக்கு ரிப்போர்ட்டர்ஸ் மீட்டிங் இருக்கு” என்றபடி கீதா மற்ற இருவருடன் ஹோட்டல் முகப்பிற்கு வந்தாள்.

சரியாக அதே நேரம் ஆலனின் கார் அவர்களுக்கு குறுக்கே வந்து நுழைவாயிலில் நின்றது.

”… அப்புறம் அந்த திருட்டு பசங்கள நான் துறத்திக்கிட்டு போனேன். அப்போ ஒருத்தன் பின்னாடி துப்பாக்கி கொண்டு வந்து..” கங்காதர் கார் நின்றும் தனது கதையை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருந்தார். ஆலன் மற்றும் பென் இருவரும் கங்காதரின் கதையால் களைத்து போயிருந்தனர். புதிய ஆட்களுடன் கங்காதர் வந்து இறங்குவதை கீதாவும், லூயிஸும் ஆச்சர்யமாக பார்த்தார்கள்.

”ஹலோ மிஸ் கீதா அண்ட் லூயிஸ் நான் ஆலன். அமெரிக்க உளவுத்துறை சிறப்பு அதிகாரி. விமான விபத்து பத்தி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்”

“அதை பத்தி எங்கக்கிட்ட பேச என்ன இருக்கு.. எல்லா பயணிகளுக்கும் என்ன தெரியுமோ அதேதான் எங்களுக்கும் தெரியும்” எதையோ மறைக்க முயல்பவள் போல பேசினாள் கீதா.

“சரி நான் ஓப்பனாவே சொல்றேன். சூப்பர்மேன்.. அப்புறம் அந்த சக்திமான் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்னு எனக்கு தெரியணும்”

ஆலனின் கேள்வியால் கீதாவும், லூயிஸும் ஆலனை குழப்பமாக பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு பின்னால் க்ளார்க்கும், கங்காதரும் ஒருவரையொருவர் திகைப்புடன் பார்த்துக் கொண்டதை யாரும் கவனிக்கவில்லை. அந்த சமயத்தில் வானத்திலிருந்து பூமி நோக்கி வந்துக் கொண்டிருந்த அந்த ஆபத்தை க்ளார்க்கும், கங்காதருமே கவனிக்கவில்லை. டெல்லியின் புறநகர் பகுதியில் வேகமாய் வீழ்ந்த அது பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறியது.

தொடரும்

Leave a comment