சூப்பர்மேன் Vs சக்திமான் – பகுதி 10

கெல்சாங் மடாலயம்

இமயமலையின் பனிக்காற்று கெல்சாங் மடாலயத்தின் ஜன்னல்கள் வழியாக புகுந்து பேய் ஓசை போல ஓலமிட்டுக் கொண்டிருந்தன. மடாலயமே பெரும் சோகத்தில் ஆழ்ந்திருப்பதாக தோன்றுமளவிற்கு அமைதியாக கிடந்தது. கெல்சாங் படுக்கை அருகே மெய்ஜி அமர்ந்திருந்தார். சுற்றிலும் மற்ற முக்கிய துறவிகள் மண்டியிட்டு அமர்ந்திருந்தனர். கெல்சாங்கின் நிலைமை கடந்த சில நாட்களாகவே மோசமாக ஆகியிருந்தது. படுத்த படுக்கையான நிலையிலும் அவர் யோதாவின் வருகைக்காக காத்திருந்தார். மெல்லிய ஒளி வீசும் இருளான கெல்சாங்கின் அறைக்குள் யோதா நுழைந்தான்.

”வா.. யோதா..” கடைசி மூச்சை இழுத்து பிடித்து மெல்ல முனகினார் கெல்சாங். தன்னை எப்போதும் வெறுத்து ஒதுக்கி வந்த கெல்சாங் தன்னை அழைத்தது யோதாவிற்கு வியப்பாக இருந்தது. அவர் அருகில் அமர்ந்தான்.

”எனக்கு தெரியும் யோதா.. உனது மனதின் உள்ளூர நீ என்னை எவ்வளவு வெறுக்கிறாய் என்று…”

“அப்படியெல்லாம் இல்லை குருவே” யோதா தலையை குனிந்து கொண்டான்.

“நீ மற்ற மனிதர்களை போல இல்லை யோதா. மனிதர்களை பற்றி உனக்கு தெரியாது என்பதுதான் என் கவலை..” பேச முடியாமல் இறுமினார் கெல்சாங். மெய்ஜி கொஞ்சம் தண்ணீரை பருக அளித்தார்.

”நீ உனது சக்திகளை கட்டுப்படுத்த கற்றுக் கொண்ட அளவிற்கு மனதை கட்டுப்படுத்த கற்கவில்லை யோதா. உன் ஆத்மா மனிதர்களிலும் மிகவும் ஆழமானது. அதை நீதான் உணர வேண்டும். உன்மீது காட்டப்படும் கோபம், வெறுப்பு, புகழ்ச்சி எல்லாவற்றையும் சமநிலையோடு அணுக நீ பழக வேண்டும். ஆனால் உன் வயது இதற்கு இப்போது ஒத்துழைக்காது. நீ அனுபவத்தால் அதை அடைய வேண்டும்..” மீண்டும் இறும தொடங்கினார்.

”எனக்கு புரிகிறது குருவே.. நான் மனிதனாக வாழவே ஆசைப்படுகிறேன்” யோதாவின் கண்களில் நீர் துளிர்த்தது.

”கனமான இருளிலிருந்து பிறக்கும் ஒளி மிகவும் பிரகாசமானது. அந்த ஒளி இந்த மடாலயத்தில் ஒரு நாள் பிரகாசிக்கும். போய் வா க்ளார்க் கெண்ட்” கெல்சாங் கண்களை மூடிக் கொண்டார். அந்த அறைக்குள் வீசிய காற்று அகல்களை அணைத்து முழுதும் இருளடைய செய்தது.

டெல்லி சிஐஏ ரகசிய இடத்தில்..

மொத்த அலுவலகமே பரபரப்பாக இருந்தது. ஆனால் ஆலன் எந்த உணர்ச்சியுமற்று தனது அறையில் அமர்ந்திருந்தார். பெஞ்சமின் உள்ளே நுழைந்தான்.

”சார்.. லெக்ஸ் கப்பலை நம்ம ஆளுங்க சுத்தி வளைச்சிட்டாங்க. ஆனா உள்ள போக முடியலை. அமெரிக்க ராணுவம் தேவைப்பட்டா உள்ள நுழைய தயார்னு சொல்லி இருக்காங்க. நீங்க ஓகே சொல்லிட்டிங்கன்னா…”

”இல்ல பென்.. இதுக்குள்ள அமெரிக்க ராணுவம் நுழையுறது ஒரு சர்வதேச பிரச்சினையை உண்டாக்கிடும். நமக்கு நிர்மல் ஜிட் சிங் உதவி செய்வார்னு நம்பிக்கை இருக்கு. அவர்கிட்ட பேச போதிய ஆதாரமும் நமக்கு கிடைச்சாச்சு. ஆனா இதுமட்டும் பத்தாதுன்னு தோணுது”

”ஆமா.. இதுமட்டும் நமக்கு பத்தாது. ஆனா இப்போதைக்கு வேற வழி இல்ல. நீங்க எதிர்பாக்குற ஆள் இனி வர போறதில்ல” என்றது அந்த குரல். சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பினர். சக்திமான் சோகமாக அங்கு நின்றிருந்தார். பெஞ்சமினுக்கு சக்திமானின் வார்த்தைகள் ஒரு பயத்தை தோற்றுவித்தன.

“சூப்பர்மேனுக்கு என்ன ஆச்சு..?”

அந்த சமயம் ஆலன் அறையில் இருந்த திரையில் திடீரென ஒரு வீடியோ தோன்ற தொடங்கியது. அதில் லெக்ஸ் லூதர் பேசத் தொடங்கினார்.

“ஹே.. ஆலன் ஒருவழியா ரொம்ப சிரமப்பட்டு என்ன கண்டுபிடிச்சிட்டீங்க போல.. வாழ்த்துக்கள். அப்படியே எனக்கு ஒரு உதவி செய்யணும் நீங்க. உங்க ஆளுங்க படு ஆபத்தான சக்திமான், சூப்பர்மேனை கொல்றதை விட்டுட்டு அவங்கள அடக்க நினைக்கிற என்ன தாக்குறாங்க.. இது ரொம்ப தப்பு.. உங்க ஜர்னலிஸ்ட்ஸ் வேற என் கப்பல்ல இருக்காங்க. எனக்கு தேவை அந்த சூப்பர்மேன். அவன நீங்க அனுப்பி வெச்சிட்டீங்கன்னா எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல. ஒருவேளை அந்த சூப்பர்மேன் இங்க வரலைனா நான் ஒன்னும் பண்ண மாட்டேன். ஆனா என்கூட ஒரு ஈவில் டாக்டர் இருக்கார். இப்போ டெல்லி பக்கம்தான் சுத்திட்டு இருக்கார். அவர் என் பேச்சை கேக்கவே மாட்றார். அவர் என்ன பண்ணுவார்னா “பவர்ர்ர்ர்”னு கத்திக்கிட்டு அவர் ஸ்பேஸ்ஷிப்பை கொண்டு போய் ஏதாவது பண்ணிடுவார். ஆனா அதுக்கு நான் காரணம்னு நீங்க நினைச்சிட கூடாது. அதை சொல்லதான் வந்தேன்… அப்புறம் சொல்ல மறந்துட்டேன்… ஹெய்ல் அமெரிக்கா..” வீடியோ முடிந்தது.

”டாக்டர் ஜக்காலைவிட இவன அதிகமா வெறுக்குறேன்” கடுப்பானார் சக்திமான்.

”பென் இந்த வீடியோவை உடனே காப்பி பண்ணு.. நாம நிர்மல் ஜிட் சிங்கிட்ட பேசியே ஆகணும்.

“நான் உடனே ஜக்காலை கண்டுபிடிக்கிறேன்” என்று கூறி சுழன்று மறைந்தார் சக்திமான்.

டெல்லியின் மீது சில நூறு மீட்டர்கள் உயரத்தில் பறந்தவாறு டெல்லி நகரத்தையே நோட்டமிட்டுக் கொண்டிருந்தார் சக்திமான். அங்கே மும்பையில் லெக்ஸ் லூதர் தனது பிரம்மாண்டமான இயந்திரத்தை பார்த்து கூரூர சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தான். ஆலனும், பெஞ்சமினும் டெல்லியில் உள்ள ராணுவ தலைமையகத்திற்கு விரைந்துக் கொண்டிருந்தனர்.

நிர்மல் ஜிட் சிங் ராணுவ அதிகாரிகளோடு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு ராணுவ வீரர் சில பைல்களோடு உள்ளே நுழைந்தார்.

“ஜெய்ஹிந்த் சாப்.. நீங்க சொன்னபடி அந்த டிவி சேனலுக்கு வீடியோ எங்க இருந்து கிடைச்சுதுன்னு விசாரிச்சோம். அவங்களுக்கு மும்பையில் இருந்து ஒரு ஸ்பீட் கூரியர்ல அந்த வீடியோ கேசட் வந்திருக்கு சார்.. ஆனா அனுப்புனவங்க டீடெய்ல்ஸ் அதுல இல்லையாம் சார்”

நிர்மல் ஜிட் சிங் யோசனையில் ஆழ்ந்தார். “இந்த மாதிரி அதிநவீன உளவு சேட்டிலைட்ஸ் வெச்சு ரெக்கார்ட் பண்ண சிஐஏ மாதிரியான அமைப்புகளாலதான் முடியும். ஒருவேளை அவங்கதான் இதை நியூஸ் சேனலுக்கு அனுப்பியிருப்பாங்களா? உடனே சிஐஏவோட சேட்டிலைட்ஸ் இந்தியாக்குள்ள எங்கெங்க சுத்தி வருதுன்னு நம்ம ரா அமைப்புக்கிட்ட சொல்லி ட்ரேஸ் பண்ணுங்க”

“அதுக்கு அவசியம் இல்ல கர்னல்.. அந்த டீடெய்ல்ஸை நாங்களே உங்களுக்கு தறோம்” என்றபடி உள்ளே நுழைந்தார் ஆலன்.

திரையில் லெக்ஸ் லூதர் பேசும் வீடியோ ஓடி முடிந்தது.

”சோ.. இந்த பைத்தியக்கார வெள்ளைக்காரனும், இவன் கூட சேந்த ஒரு முட்டாள் டாக்டரும் சூப்பர்மேனை வில்லனா காட்ட முயற்சி பண்றாங்க அப்படித்தானே”

“நீங்க இதை எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியல மிஸ்டர் கர்னல். ஆனா உண்மை இதுதான். சூப்பர்மேனோ, சக்திமானோ வேற வேற இல்ல.. ரெண்டு பேருமே உலகத்தை காப்பாத்ததான் முயற்சி பண்றாங்க. நாம அவங்க பக்கம் நின்னா எதிரிகளை ஈஸியா வீழ்த்திடலாம்”

“ஒரு சிஐஏ உயர் அதிகாரி இந்த விஷயத்துக்காக நேரடியா வந்து இந்திய ராணுவத்துக்கிட்ட பேசுறது ஆச்சர்யமா இருக்கு. ஆனா ஏற்கனவே சூப்பர்மேனை கொல்ல டெத்வாரண்ட் வாங்கியாச்சு.. உயிரோடவோ அல்லது பிணமாவோ”

அப்போது நிர்மல் ஜிட் சிங்கின் வாக்கி டாக்கி ஒலித்தது. “சார் உடனே உங்க ஹால்ல உள்ள டிவியை ஆன் பண்ணி பாருங்க”

டிவி ஆன் செய்யப்பட்டது. “கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் பெரும் அசம்பாவிதத்தை ஏற்படுத்திய தீவிரவாதிகளின் தலைவன் சூப்பர்மேன் மும்பையில் பறந்து செல்வதை எங்களது கேமரா மேன் படம் பிடித்துள்ளார்” சூப்பர்மேன் ஹார்பரை நோக்கி பறந்து செல்லும் காட்சிகள் டிவியில் ஒளிபரப்பானது.

ஆலனின் சாட்டிலைட் போன் ஒலித்தது. “சார்.. லெக்ஸ் கப்பலை நோக்கி சூப்பர்மேன் போயிட்டு இருக்கார்”

”சரி நீங்க தொடர்ந்து அங்க என்ன நடக்குதுன்னு எனக்கு தகவல் குடுத்துட்டே இருங்க” என்று போனை கட் செய்தார்.

நிர்மல் ஜிட் சிங் ஒரு கேப்டன் ஒருவனை அழைத்தார் “உடனே மும்பையில இருக்க நேவி ஃபோர்ஸுக்கு தகவல் குடுங்க லெக்ஸ் கப்பலை சுத்தி வளையுங்க. ஹார்பர்ல இருக்க வொர்க்கர்ஸ், பேசஞ்சர்ஸ் எல்லாரையும் வெளியேத்துங்க. முக்கியமா ப்ரெஸ் உள்ள போயிடாம பாத்துக்கோங்க”

கர்னலும், ஆலனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சரி என்பது போல தலையாட்டிக் கொண்டனர்.

மும்பை ஹார்பர் சிறிது நேரத்தில் ஆள் அரவமின்றி ஆனது. ஹார்பர் எல்லைக்கு அப்பால் வெளியேற்றப்பட்ட மக்கள் கூட்டம் வானத்தில் பறந்து செல்லும் அந்த உருவத்தை பார்த்து அதிசயத்தில் வாய்பிளந்து நின்றனர். வழக்கம் போல மின்னல் வேகத்தில் இல்லாமல் காற்றில் பறக்கும் சிறகு போல மெல்ல பறந்து கப்பலின் தளத்தை சென்றடைந்தார் சூப்பர்மேன். கப்பலில் இருந்த ஸ்பீக்கர் ஒலித்தது.

”வெல்கம் சூப்பர்மேன்.. உனக்கு ஸ்பெஷல் விருந்து வெச்சிருக்கேன்” என்று லெக்ஸின் குரல் கேட்டது. சூப்பர்மேனை சூழ்ந்து கொண்ட மூன்று பேர் அவரை நோக்கி விசேஷமான துப்பாக்கியால் சுட்டனர். அதிலிருந்து வந்த பச்சை நிற வாயு சூப்பர்மேனை மயக்கமடைய செய்தது. அவரை தரையில் போட்டு இழுத்தபடி உள்ளே கொண்டு சென்றனர் அந்த மூவரும்…

இதை சிஐஏவின் ஸ்பை சாட்டிலைட் மூலமாக பார்த்துக் கொண்டிருந்தனர் கர்னலும், ஆலனும்..

”அவங்க சூப்பர்மேனை பிடிச்சிட்டாங்க..”

“நமக்கு வேற வழி இல்ல மிஸ்டர் ஆலன்.. சூப்பர்மேன் நல்லவனோ கெட்டவனோ.. இப்ப அவனால ஆக போறது எதுவுமில்ல. அதுனால ஒரு மிசைல அனுப்பி மொத்தமா அந்த கப்பலை சிதறடிச்சிடலாம்” என்றார் கர்னல்.

”கர்னல் அது ரொம்ப தப்பு.. அந்த கப்பலுக்குள்ள நம்ம ரெண்டு நாட்டையும் சேர்ந்த ரெண்டு ஜர்னலிஸ்ட்ஸ் சிறை பிடிக்கப்பட்டிருக்காங்க”

“ஆனா ரெண்டு பேருக்காக மொத்த மும்பையையும் பணயம் வைக்க முடியாது ஆலன்.. நமக்கு வேற வழி இல்ல..”

ஆலன் மௌனமானார்.

உள்ளே கொண்டு செல்லப்பட்ட சூப்பர்மேன் ஒரு பெரிய எந்திரத்தின் உயரத்தில் இருந்த கண்ணாடி குடுவையில் அடைக்கப்பட்டார்.

“வாவ்.. இந்த தருணத்துக்காக எத்தனை நாளா ப்ளான் பண்ணியிருக்கேன் தெரியுமா நான்.. இது என் ப்ராஜெக்டுக்கு கிடைச்ச மிகப்பெரிய வெற்றி” என்று மகிழ்ச்சியில் ஆராவாரம் செய்தபடி கீழே ஏதேதோ பட்டன்களை அழுத்திக் கொண்டிருந்தான் லெக்ஸ்

அந்த பெரிய பிரம்மாண்டமான ஆய்வகத்தின் மூலையில் கைகளில் விலங்குகள் கட்டப்பட்டு சோகத்துடன் அமர்ந்திருந்தனர் லூயிஸும், கீதாவும்!

கண்ணாடி குடுவைக்குள் அடைக்கப்பட்டிருந்த சூப்பர்மேன் சக்தியை திரட்டி பேச தொடங்கினார் “என்கிட்ட இருந்து என்ன எதிர்பார்க்கிற லெக்ஸ்..”

“ஒன்னும் இல்ல சூப்பர்மேன்.. ஒரு சின்ன உதவிதான். இந்த உலகத்தை காப்பாத்த உன்னோட சக்திகள் எனக்கு தேவை. ஏன்னா மனுஷனால மட்டும்தான் மனுஷங்களை காப்பாத்த முடியும்.. எங்கிருந்தோ வந்த ஏலியன்களால மனுசங்களை புரிஞ்சிக்க முடியாதுன்னு நான் நம்பறேன்”

லூயிஸ் ஆவேசமானாள் “மனிதர்களை காப்பாத்த தேவக்குமாரர்கள் பூமிக்கு வந்த கதைகளை நீ படிச்சதில்லையா லெக்ஸ். மக்கள் அப்படியானவர்களைதான் கடவுளாக கும்பிட்டு வறாங்க.. அவங்கதான் மக்களோட நம்பிக்கை”

அங்கே டெல்லியிலிருந்து அரபிக்கடலில் நின்றிருந்த இந்திய ராணுவ கப்பலுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ராணுவ கப்பலிலிருந்து புறப்பட்ட ஏவுகணை லெக்ஸ் கப்பலை பதம் பார்க்க புறப்பட்டது.

“நீ சொல்றதும் சரிதான்.. ஆனா மக்களோட நம்பிக்கையை பெறனும்னா தேவக்குமாரர்கள் சில விலை குடுத்தாகனும். லைக் ஜீசஸ் க்ரைஸ்ட் போல..” என்றான் லெக்ஸ்

“உனக்கு என்ன வேணும் லெக்ஸ்.. என்னோட உயிரா..” என்றார் சூப்பர்மேன்.

“அவ்ளோ வேணாம் சூப்பர்மேன்.. உன்னோட பவர் மட்டும் போதும்” என்றபடி ஒரு பொத்தானை அழுத்தினான். கண்ணாடி குடுவையை சுற்றி சில லேசர் ஒளிகள் தோன்றி சூப்பர்மேன் மீது பாய்ந்தன.

அதேசமயம் டெல்லி ராணுவ தலைமையகத்தில் ஆபத்துக்கான அலர்ட் சத்தம் கேட்க தொடங்கியது.

“என்ன நடக்குது இங்க?” என்று புரியாமல் கேட்டார் ஆலன்

“டெல்லி நோக்கி ஆபத்தான ஏதோ ஒன்னு வருது.. ஏதோ மிசைல் போல இருக்கு”

“ஓ மை காட்.. இது அந்த ஈவில் டாக்டர் ஜக்காலோட வேலையா இருக்கணும். அவனுங்க சொன்னபடி நடந்துக்க மாட்டாய்ங்க போல..உடனே உங்க ராக்கெட் டெஸ்ட்ராயர்ஸை அலர்ட் பண்ணுங்க கர்னல்”

“நாங்க இன்னும் ராக்கெட் டெஸ்ட்ராயர்ஸ் அளவுக்கு முன்னேறல மிஸ்டர் ஆலன்”

அதேசமயம் லெக்ஸ் லூதரின் கப்பலை நோக்கி இந்திய ஏவுகணை சென்று கொண்டிருந்தது. லெக்ஸ் ஆய்வகத்தில் சூப்பர்மேன் மீது செலுத்தப்பட்ட கதிர்கள் அவரது சக்தியை உறிஞ்சி லெக்ஸின் ரோபோட்டை சார்ஜ் செய்து கொண்டிருந்தது.

”வாவ்.. 75 சதவீத ஆற்றல்.. கிட்டத்தட்ட சூரியனின் கால்வாசி ஆற்றல் உன்கிட்ட இருக்கு சூப்பர்மேன்” கூத்தாடினான் லெக்ஸ்.

சூப்பர்மேன் முனுமுனுத்தார் “உனக்கு என் சக்திதான தேவை.. மொத்தமா நீயே எடுத்துக்கோ லெக்ஸ்” என்றபடி தன் கண்களை மூடினார்.

டெல்லியில் ஆகாயத்தில் சக்திவாய்ந்த எரிக்கல் போல அந்த ஏவுகணை மெல்ல நெருங்கி கொண்டிருந்தது. மக்கள் ஒருவித பயத்துடன் வானிலிருந்து வந்து கொண்டிருக்கும் அந்த எமனை பார்த்தபடி நின்று கொண்டிருந்தார்கள். குழந்தைகள் பயந்து தங்களது தாய்மார்களை இறுக்கி அணைத்துக் கொண்டன.

லெக்ஸ் லூதரின் பவர் மானிட்டரின் முள் தனது எல்லையை எட்டியது. பவர் சோர்ஸ் வேகமாக அதிகரித்தது. லெக்ஸ் கண்கள் அதிர்ச்சியில் உறைந்தன. “இது.. இது.. கிட்டத்தட்ட ஒரு சூரியனுக்கு நிகரான சக்தி.. போதும்.. வேணாம்.. நிறுத்து..” அலறினான் லெக்ஸ். அதீத சக்தியால் கண்ணாடி குடுவை வெடித்து சிதறியது. அதிலிருந்து சூப்பர்மேன் வெளியேறினார்.

உடனே லெக்ஸ் ஒரு கிரிப்டோனைட் கல்லை துப்பாக்கி ஒன்றில் பொருத்தி சூப்பர்மேன் மீது சுட்டான். அது சூப்பர்மேன் மீது மோதிய வேகத்தில் உடைந்து கண்ணாடி துகள்களை போல கொட்டியது. லூயிஸும், கீதாவும் தன் கண்களையே நம்ப முடியாமல் வியந்து பார்த்தனர்.

அந்த சமயம் டெல்லியில் விழ இருந்த ஏவுகணை நோக்கி திடீரென ஒரு உருவம் விரைந்து சென்றது. மக்கள் சுதாரித்து அதை கவனிக்கும் முன்னரே ஏவுகணை மீது அந்த உருவம் மோதியதில் வானத்திலேயே அந்த ஏவுகணை வெடித்து சிதறியது. மக்கள் சிதறிய ஏவுகணைக்கு நடுவே இருந்து பூமிக்கு இறங்கிய அந்த உருவத்தை ஆச்சர்யத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

லெக்ஸின் எந்திரம் வெடித்ததில் சூப்பர்மேனின் ஆடைகள் கிழிந்திருந்தன. அந்த புகைமூட்டத்தில் லெக்ஸை நெருங்கி வந்தார் சூப்பர்மேன். அவரது நெஞ்சில் பதிந்திருந்த எஸ் முத்திரை கிழிந்து உள்ளே இருந்த தங்க சக்கரங்கள் பிரகாசித்தன

லெக்ஸ் அதிர்ச்சியில் ”நீ… நீ..” என்று அலறினான்.

கீதாவும் லூயிஸும் ஒரே குரலில் ஆச்சர்யமாக சொன்னார்கள் “சக்திமான்”

எஸ் முத்திடை பதித்த சூப்பர்மேன் ஆடைகள் பாதி கிழிந்த நிலையில் தங்க சக்கரங்கள் மின்ன கண்களில் கோபம் கொப்பளிக்க நின்றுக் கொண்டிருந்தார் சக்திமான்.

அங்கே டெல்லியில் கறுப்பு நிற உடையில் இறங்கி நின்ற அந்த மனிதனை மக்கள் வியப்புடன் நெருங்கி வந்தனர். ஒரு குழந்தை அந்த மனிதனை நெருங்கி அந்த எஸ் முத்திரை மீது கையை வைத்தது. பிறகு ஒவ்வொருவராக சூப்பர்மேனை சூழ்ந்து அவரது கறுப்பு உடையின் மீது கையை வைத்து தலைகுனிந்து நின்றனர்.

தொடரும்

Leave a comment