சூப்பர்மேன் Vs சக்திமான் – பகுதி 9

ஸ்மால்வில்லே, அமெரிக்கா.

க்ளார்க் கெண்ட்டின் 14 வயதில்…

மற்ற சிறுவர்களோடு விளையாட ஆசைப்படுவதை க்ளார்க் மறந்திருந்த காலம். பலரும் அவனை புறக்கணித்த நிலையில் அவனும் அவர்களை புறக்கணித்து தனியாக வாழ பழகிக் கொண்டிருந்தான். பள்ளிக்கு போகாமல் ஸ்மால்வில்லே வயல்களில் உலாவிக் கொண்டிருந்தான் அல்லது அப்பாவின் கேரேஜில் கிடந்த எந்திரங்களை சரிசெய்து பழகிக் கொண்டிருந்தான். அன்று மரத்தடியில் ஓய்வாக அமர்ந்து தனக்கு விருப்பமான ஹோப் மேன் காமிக்ஸை படித்துக் கொண்டிருந்தான். திடீரென அவனது காமிக்ஸ் புத்தகத்தை பிடுங்கியது ஒரு சிறுவர் கும்பல்.

“உக்காந்திருக்கது.. யார் பாத்தியா?” என்று நக்கலாக கேட்டான் ஒருவன்.

இன்னொருவன் ஒரு சிறு குச்சியை ஒடித்துக் கொண்டு வந்து க்ளார்க்கை அடிக்க தொடங்கினான். சுற்றியிருந்த மற்ற சிறுவர்கள் அதை பார்த்து சிரித்தனர்.

“என்னை அடிக்காதீங்க..தயவு செஞ்சு அந்த புக்கை என்கிட்ட குடுங்க.. ஏன் என்னை இப்படி பண்றீங்க?” க்ளார்க் கண்களில் அழுகையோடு கெஞ்சினான்.

“ஏன்னா.. உன்னை எங்களுக்கு புடிக்கலைடா!” என்றவாறே ஹோப்மேன் காமிக்ஸை கிழிக்க தொடங்கினான் ஒருவன். தனது தந்தை பரிசளித்த காமிக்ஸை கிழிப்பதை பார்த்த க்ளார்க் கோபமடைந்தான். மின்னல் வேகத்தில் மற்றவர்களை தள்ளிவிட்டு அவனை நெருங்கிய க்ளார்க் ஓங்கி ஒரு குத்துவிட்டான். க்ளார்க் அடித்த வேகத்தில் சில மீட்டர்கள் காற்றில் பறந்து வயலில் சென்று விழுந்தான் அந்த சிறுவன். அதை கண்ட மற்ற சிறுவர்கள் மிரட்சியுடன் க்ளார்க்கை பார்த்தனர்.

”நீ ஒரு சாத்தான்..” என்று கத்திவிட்டு அவர்கள் அந்த இடத்தை விட்டு ஓடினர். க்ளார்க் மனதில் அந்த வார்த்தை மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது. அவன் தன் கைகளையே கோபத்தோடு பார்த்தான். அழுதுகோண்டே ஸ்மால்விலேயின் வயல்களில் ஓடி மறைந்தான்.

சிஐஏ ரகசிய அலுவலகம், டெல்லி

”சார் விஷயம் ரொம்ப சீரியஸ் ஆயிட்டு.. சூப்பர்மேனுக்கு எதிரா இந்தியா பிறப்பிச்சிருக்க உத்தரவுக்கு ஆதரவு தருவதா அமெரிக்காவும் தெரிவிச்சிருக்கு” சோகத்தோடு சொன்னார் ஆலன்.

“அப்படின்னா அமெரிக்க ராணுவ படைகள் இந்தியாக்குள்ள நுழைய போறாங்களா?” பென்

“இல்லை.. அதுக்கு இந்தியா ஒத்துக்க மாட்டாங்க. அமெரிக்காவோட எந்த பகுதியில சூப்பர்மேனை பார்த்தாலும் தாக்க உத்தரவு கொடுத்திருக்காங்க”

”உங்களால இதை தடுக்க முடியும் சார்.. நீங்க நிர்மல் ஜிட் சிங்கிட்ட பேசுங்க”

”அதுக்கு நமக்கு ஆதாரம் வேணும் பென். அவர்கிட்ட போய் ஸ்பேஸ்ஷிப் கதையை சொன்னா கை கொட்டி சிரிப்பார்”

“ஆனா சக்திமானையும், சூப்பர்மேனையும் நம்புறவங்க.. இதை நம்ப மாட்டாங்களா?”

”அவர் நம்ப மாட்டார் பென்.. அவருடைய எண்ணம் இந்த அழிவுகளை ஏற்படுத்துனது சூப்பர்மேன். பயங்கரவாதிகள் குடுத்த வாக்குமூலமும் அதைத்தான் சொல்லுது….”

”எஸ்க்யூஸ் மீ சார்.. டெல்லி அட்டாக் பத்தி புதுசா சில தகவல்கள் கிடைச்சிருக்கு” என்றபடி உள்ளே நுழைந்தார் பெண் அதிகாரி ஒருவர்.

ஆலனும், பென்னும் அந்த பெண் சொல்ல போவதை கேட்க தயாரானார்கள்.

“பயங்கரவாதிகள் டெல்லிக்குள்ள எப்படி வந்தாங்கன்னு ட்ரேஸ் பண்ணுன போது.. அவங்க விமானத்துலயோ, எல்லை வழியாகவோ ஊருறுவி வரலைன்னு தெரிஞ்சிருக்கு சார். சோ.. அவங்க கடல் மார்க்கமா உள்ள நுழைஞ்சிருக்கலாம்.”

அதை கேட்டதும் ஆலனுக்கு பொறி தட்டியது.

“பென்.. டெல்லி அட்டாக்ல நீ பாத்த ஸ்பேஸ்ஷிப் எந்த இடத்துல ஹைட் ஆனுச்சு?”

“மஹாராஷ்ட்ரா வரைக்கும் போறதை ட்ரேஸ் பண்ண முடிஞ்சது சார்”

“சரி.. உடனே நம்ம ஸ்பை சேட்டிலைட்டை மும்பை ஹார்பர் பக்கம் அனுப்புங்க.. மும்பை ஹார்பர் அப்புறம் அதை சுத்தி இருக்க பகுதிகள்ல கடந்த சில வாரங்கள்ல எந்த கப்பல்கள் வந்து போச்சுன்னு டேட்டாவை ரெடி பண்ணுங்க.. இல்லீகலா யாராவது வந்திருந்தா கூட நமக்கு தெரியணும். டூரிஸ்டா சுத்திட்டு இருக்க நம்ம ஏஜெண்டுகளுக்கு தகவல் குடுத்துடுங்க”

ஆலன் சொல்லிக் கொண்டிருந்தபோதே பென் எதையோ கண்டுபிடித்திருந்தான்.

”இதுக்கு மேல அவனை கண்டுபிடிக்க நாம கஷ்டபட தேவையில்லை சார்.. அவன் இங்கதான் இருக்கான்” என்றபடி ஒரு இமேஜை பெரிய திறையில் ஸூம் செய்து காட்டினான். அதில் லெக்ஸ் கார்ப் கப்பல் துறைமுகத்துக்கு அப்பால் நங்கூரமிட்டு நின்றதை அந்த படங்கள் காட்டியது.

ஆலன் சின்ன சிரிப்புடன் சொல்லிக் கொண்டார் “எதிர்காலத்துல நம்மளோட தொழில்நுட்பங்களை ரொம்ப டெவலப் பண்ண வேண்டியிருக்கு பென். எதிரிகள் நம்மை விட வேகமா இருக்காங்க”

”சார்.. அந்த ரிப்போர்டர்ஸை அங்கதான் அவங்க ஒளிச்சு வெச்சிருக்கணும். நாம உடனே நம்ம ஸ்குவாடை அங்க அனுப்பலாம்”

“லெக்ஸ் ஒரு பைத்தியம் பென். அவனை நம்ம யூகிக்க முடியாது.. ஆனா சிக்க வைக்கலாம்..!” ஆலனின் உள்ளத்தில் ஒரு திட்டம் தோன்றியிருந்தது.

மும்பை துறைமுகம்

ஒரு மிகப்பெரும் நாசகார செயலுக்கு லெக்ஸ் கப்பலில் பலர் தீவிரமாக பணியாற்றி கொண்டிருந்தனர். அவர்களிடையே லூயிஸையும், கீதாவையும் ஒரு ராட்சத ரோபோவின் முன்னாள் அழைத்து வந்து நிறுத்தியிருந்தான் லெக்ஸ் லூதர்.

”ஹே.. கீதா.. நேத்து போரடிக்கிதுன்னு ஒரு இந்திய படம் பாத்தேன். அதுல வில்லன் தான் செஞ்ச தப்பையெல்லாம் முழு மூச்சாய் விடாமல் ஹீரோவை கட்டிப்போட்டு சொல்லிக்கிட்டு இருப்பான். அதை பாத்ததும் எனக்கு சிரிப்புதான் வந்துச்சு” என்று சொல்லிவிட்டு லெக்ஸ் தனக்கு தானே சிரித்துக் கொண்டான்.

ஆனால் கீதா, லூயிஸ் முகத்தில் இருந்த கடுப்பு மாறவில்லை.

”சரி.. நானும் அந்த மாதிரி மணி கணக்கா பேசபோறதில்ல.. ஜஸ்ட் ஒரு சின்ன க்ளூ மட்டும் கொடுக்கிறேன். இந்த இயந்திர ரோபோதான் சூப்பர்மேன்கிட்ட இருந்தும், சக்திமான்கிட்ட இருந்தும் உலகத்தை காப்பாத்த போகுது.. ஆனா அதுக்கு எனக்கு கொஞ்சம் பவர் தேவை..”

“ஆமா..பவர்ர்ர்ர்” என்று அருகிலிருந்து கொண்டு கத்தினான் டாக்டர் ஜக்கால்.

அப்போது கப்பலில் அலாரம் ஒலிக்க தொடங்கியது. லெக்ஸின் வாக்கி டாக்கியில் அழைப்பு வந்தது.

”சார்.. சிஐஏ நம்ம தகவல்களை திருட முயல்றாங்க.. அதுவுமில்லாம கப்பலை சுத்தி ஆட்கள் நடமாட்டம் அதிகமா தெரியுது.”

“ஓ… ஆட்டத்தை தொடங்கிட்டாங்க போல நாமளும் நம்ம ஆட்டத்தை தொடங்க வேண்டியதுதான்”

லெக்ஸ் பேசுவதை துறைமுகத்தில் இருந்த ஹாம் தொழில்நுட்பம் மூலம் ட்ரேஸ் செய்து கேட்டுக் கொண்டிருந்தது சிஐஏ உளவு அமைப்பு.

அதன் படைவீரர்களில் ஒருவன் ஆலனை தொடர்பு கொண்டான். “சார் நம்ம ட்ரேஸ் பண்றது லெக்ஸுக்கு தெரிஞ்சிட்டு. அநேகமாக நம்ம மேல தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கு”

தனது அலுவலகத்தில் இருந்து அதை கேட்டுக் கொண்டிருந்தார் ஆலன். சிஐஏ ரகசிய படை சிறிய அளவிலான படகுகளில் லெக்ஸ் கப்பலை சுற்றி வளைத்திருந்தன. திடீரென லெக்ஸ் கப்பலில் இருந்து கடலுக்கு கீழிருந்து சில ஏவுகணைகள் தோன்றி ரகசிய படைகளின் படகுகளை நோக்கி விரைந்தன.

”டீம் மிசைல் அலர்ட்..” கரையிலிருந்த படை வீரர்கள் அலர்ட் செய்தனர். ஆனால் அதற்குள் ஏவுகணைகள் சுற்றியிருந்த படகுகளை தாக்கி அழித்திருந்தன. சில வீரர்கள் மட்டும் உடனடியாக கடலில் குதித்ததால் தப்பியிருந்தனர். ஆலனுக்கு செய்தி வந்தது.

”பென் உடனே சக்திமான் எங்க இருந்தாலும் கனெக்ட் பண்ண முயற்சி செய்” என்றார் ஆலன்.

சக்திமான் சூப்பர்மேனை தேடும் பணியில் தீவிரமாக இருந்தார். ஒருவேளை சூப்பர்மேன் அமெரிக்காவிற்கே சென்று விட்டாரோ என்று கூட நினைத்தார். எங்கு தேடியும் சூப்பர்மேனை காணாத நிலையில் தனது ரகசிய குகைக்கு செல்வதென்று முடிவெடுத்தார். எந்தவித பராமரிப்பும் இன்றி பாழடைந்து கிடந்தது அந்த குகை. அதன் வாயிலை பெரிய பாறையை வைத்து மூடியிருந்தார் சக்திமான். பாறையை அவர் விலக்கவும் சூரிய ஒளி குகைக்குள் பரவ தொடங்கியது. திடீர் வெளிச்சத்தால் மிரட்சியடைந்த எலிகளும் மற்ற பூச்சிகளும் தங்களது மறைவிடத்தை நோக்கி ஓடி மறைந்தன. சூரியனின் ஒளிக்கதிர்கள் அங்கு எந்தவித சலனமும் இன்றி இருந்த ஒரு உருவத்தின் மீது விழுந்ததை சக்திமான் கவனித்திருக்கவில்லை அல்லது கவனிக்காதது போல கடந்து சென்றார். சக்திமான் தான் உருவாகி வந்த அக்னி பீடத்தின் முன்பு அமர்ந்து சிறிது நேரம் அமைதியாக தியானம் செய்ய தொடங்கினார்.

”உலகத்தை காப்பாற்றுவதும் மக்களின் நன்மதிப்பை பெறுவதும் துறவிகளால் மட்டுமே ஆன காரியம் சக்திமான்”

சூப்பர்மேனின் குரல் கேட்டும் சக்திமான் முகத்தில் சலனமில்லை. சூப்பர்மேன் தொடர்ந்தார்.

“எனக்குன்னு உலகம் எதுவும் இல்லை துறவியே.. இந்த உலகம் என்னை ஏற்றுக் கொள்ளவும் தயாராக இல்லை. செத்துவிட முடிந்தால் நன்றாக இருக்கும்”

“அது உன்னால முடியாது க்ளார்க்.. சாவு இல்லாத வாழ்க்கை சில சமயங்களில் வரம்.. பல சமயங்களில் சாபம்.. இது மனிதர்களின் உலகம் க்ளார்க். இங்க வாழ நம்பிக்கைகள் தேவை.. உன்னோட நம்பிக்கை எதுன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கியா?”

”என்னுடைய நம்பிக்கை, ஆசை எல்லாம் இந்த உலகத்துல மனுஷங்களோட சக மனுஷனா வாழணும் என்பதுதான்.. ஆனால் ஒவ்வொரு தடவையும் நான் இந்த உலகத்தை சேந்தவன் கிடையாது வேற ஒருத்தன் என ஒதுக்கும்போதும் என் நம்பிக்கையை நான் இழக்கிறேன்”

”க்ளார்க் கெண்ட்டை உலகம் எப்போதும் ஏத்துக்கும் கால் எல். மக்களுக்கு நண்பனாகவும், அச்சுறுத்தலாகவும் இருக்கது சூப்பர்மேன்தான். ஆனால் நீ யாரக இருப்பதில் நிறைவு அடைகிறாய் என்பதில்தான் உனது நம்பிக்கைகளும் இருக்கு. ஒரு க்ரிப்டோனியனாய் நீ சூப்பர்மேன். அதை மறைக்கும் வெளி வேஷம்தான் க்ளார்க் கெண்ட். நீ சூப்பர்மேனாய் இருக்கதானே விரும்புகிறாய்..”

“இல்ல.. இனி வெளி வேஷம்தான் முழு வாழ்க்கையும்.. இந்த உலகம் சூப்பர்மேன் இல்லாமலும் இயங்கதான் போகுது. உங்களை போல எத்தனையோ சூப்பர்ஹீரோக்கள் மக்களுக்கு உதவ இருக்காங்க. இனிமேல் இந்த உலகிற்கு சூப்பர்மேன் தேவையில்லை”

“அவசரத்தில் எடுக்குற எந்த முடிவும் ஆக்கப்பூர்வமானதா இருக்காது க்ளார்க். நீ வித்தியாசமானவனா இருக்கலாம். உன்னை பழி சொல்லவும், வாழ்த்தவும் உலகத்தில் மனிதர்கள் இருந்து கொண்டே இருப்பாங்க. நீ பழிகளை தாங்க பழகணும் க்ளார்க். கடவுளின் மகன்களும் பழிகளை தாங்க பழகியுள்ளனர் என்பதை மறந்துவிடாதே”

“இல்லை.. நான் கடவுளின் மகன் இல்லையே! நான் ஒரு சாத்தான்.. என்னால இந்த உலகத்திற்கு நன்மையை விட ஆபத்து அதிகம்”

“நன்மை தீமை என்பதே கற்பனைதான் க்ளார்க்..உனது சக்திகளை கட்டுப்படுத்த கற்று கொண்ட அளவிற்கு உனது மனதை கட்டுப்படுத்த நீ பழகவில்லை. உலகில் நன்மை, தீமை என்று எதுவும் இல்லை…” என்று தனது குரு அருளிய வாசகத்தை சொல்ல தொடங்கினார் சக்திமான்.

ஆனால் எதிர்பாராத விதமாக சக்திமான் சொல்லி முடிக்கும் முன்னரே அதை க்ளார்க் சொல்ல தொடங்கினான் ”உண்மை, பொய் என்றும் எதுவும் இல்லை. பார்க்கும் மனங்களில்தான் அது இருக்கிறது. நீ ஒன்றை எதைக் கொண்டு பார்க்கிறாயோ அதுவாகவே அது தெரியும். அழிக்க வேண்டியது தீமையைதானே தவிர தீமை செய்பவர்களை அல்ல” என்று க்ளார்க் முடித்தான்.

அதை கேட்டதும் சக்திமான் அதிர்ந்து போய் எழுந்து நின்றார். இது குரு மெய்ஜியின் தத்துவமல்லவா என்று குகை மறைவில் கூனி குருகி அமர்ந்திருந்த க்ளார்க்கை உற்று நோக்க தொடங்கினார். மெல்ல எழுந்து நின்ற க்ளார்க் இருளிலிருந்து ஒளி படும் பகுதிக்கு மெல்ல நகர தொடங்கினான். அவனது சிவப்பு நீல சூப்பர்மேன் உடை அவனிடம் இல்லை. வெள்ளை அங்கியை அணிந்திருந்தான். கண்ணாடி அணியவில்லை. உடலில் வெள்ளை அங்கியை தவிர வஸ்திரம் ஏதுமின்றி ஒரு முழு துறவியாய் சூரியனின் ஒளியில் பிரகாசித்தான் க்ளார்க் கெண்ட்.

சக்திமானின் முகத்தில் ஏற்பட்ட வியப்பும், அதிர்ச்சியும் இன்னும் குறைந்தபாடில்லை. சக்திமானால் வியப்பில் பேச முடியாமல் “நீ… நீ…” என்று மட்டும் சொல்லிக் கொண்டிருந்தார். அவரது வியப்புக்கு பதில் சொன்னான் க்ளார்க்.

“ஆமாம்.. நான் யோதா.. குரு கெல்சாங்கின் சீடன்”

தொடரும்

Leave a comment