சூப்பர்மேன் வெர்சஸ் சக்திமான் – பகுதி 5

ஸ்மால்வில்லே, அமெரிக்கா

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சோள வயல்கள் படர்ந்து விரிந்திருந்த அந்த கிராமத்தில் புள்ளி வைத்தாற்போல ஓரமாய் இருந்தது ஒரு சிறிய மரவீடும் அதையொட்டி சின்ன கேரேஜும். மார்த்தா உள்ளே சமையல் வேளையில் தீவிரமாக இருந்த போது கரடுமுரடான வயல்பாதையில் குலுங்கி குலுங்கி வந்து நின்றது அந்த சிறிய ரக ட்ரக். வீட்டிற்குள் சென்ற ஜோனதன் சமையலறையில் இருந்த மார்த்தாவை சென்று கட்டியணைத்தான்.

“ஹே.. டார்லிங்! இன்னைக்கு என்ன சமையல்?”

ஜோனதனின் கேள்விக்கு பதில் சொல்லும் மனநிலையில் மார்த்தா இல்லை. அவள் முகம் வாடியிருந்தது. ஜோனதனால் என்ன நடந்திருக்குமென்று யூகிக்க முடிந்தது.

“மறுபடி க்ளார்க் ஏதாவது பிரச்சினை பண்ணிட்டானா?” என்றார்.

”அவனுக்கு  ஸ்கூலுக்கு போக பிடிக்கலைனு சொல்றான். மத்த பசங்க அவன் கூட சரியா பழகுறது இல்லையாம்! அவன் பயப்படுறான் ஜோனதன். நீங்க அவன்கிட்ட கண்டிப்பா பேசணும்” மார்த்தா கண்கள் கலங்கின. ஜோனதன் அவளை கட்டியணைத்து தேற்றினார்.

கேரேஜூக்குள் இருட்டில் கண்கள் கலங்க அமர்ந்திருந்தான் க்ளார்க். ஜோனதன் கதவை திறந்ததால் வீசிய சூரிய வெளிச்சம் க்ளார்க் முகத்தில் பட்டு மறைந்தது. ஜோனதன் க்ளார்க் அருகில் வந்து அமர்ந்தார். சின்னஞ்சிறுவனான க்ளார்க் ஜோனதன் மடியில் ஏறி அமர்ந்து அவரை கட்டியணைத்துக் கொண்டான்.

”உனக்கு அவங்களோட பழக ரொம்ப கஷ்டமா இருக்கா க்ளார்க்?”

”நான் பழக முயற்சி பண்ணுனேன். ஆனா அவங்க என்னை ஒதுக்குறாங்க. எனக்கு ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல. செத்துடலாம் போல இருக்கு”

”இப்படியெல்லாம் பேச எங்க கத்துக்கிட்ட க்ளார்க்? சாகறது வாழ்றதை விட கஷ்டமான விஷயம் இல்ல! அதுக்காக எல்லாரும் செத்துக்கிட்டா இருக்காங்க”

க்ளார்க் கண்களை ஜோனதன் துடைத்துவிட்டார். அவனது நெற்றியில் முத்தமிட்டார்.

”எல்லாரும் ஏதோ ஒரு நம்பிக்கையின் பேர்லதான் வாழ்ந்துட்டு இருக்காங்க க்ளார்க். உனக்கு வாழ பிடிக்கலைனா உனக்கு ஒரு நம்பிக்கையை நீ உருவாக்கிக்கணும்!” என்றபடி அவனது கையில் ஒரு புதிய காமிக்ஸ் புத்தகத்தை அளித்தார்.

அதை பார்த்ததும் க்ளார்க் உதடுகள் புன்னகைக்க தொடங்கின. “ஹோப் மேன்” காமிக்ஸ் பெயரை ஒருமுறை சொல்லி பார்த்தான். நெஞ்சில் H முத்திரையுடன் திடகாத்திரமான வீரன் ஒருவன் குழந்தைகளை தூக்கி கொண்டு வானில் பறந்துக் கொண்டிருந்தான்.

புதுடெல்லி, இந்தியா

தனியார் விடுதி ஒன்றிலிருந்த டிவியில் முக்கிய செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது “டெல்லி விமான நிலையம் அருகே விமானம் விபத்துக்குள்ளானபோது எங்களது கேமராமேன் அதை அதிர்ஷ்டவசமாக படம் பிடித்துள்ளார். அந்த விமானத்தை சக்திமான் காப்பாற்றுவதும் உடன் வேறு ஒருவர் இருப்பதும் அதில் பதிவாகியுள்ளது”

செய்தியை கேட்டதும் கீதாவும், லூயிஸும் தொலைக்காட்சியை கவனிக்க தொடங்கினார்கள். ”ஆனால் உடன் இருப்பவர் யார் என கேமராவில் துல்லியமாக தெரியவில்லை. அவர் யார் சக்திமான் போல மற்றுமொருவரா அல்லது விரோதியா?” டிவி நிருபர் கேள்விகளை அடுக்கிக் கொண்டிருந்தார்.

”அமெரிக்காவுக்கு மட்டுமே தெரிஞ்ச சூப்பர்மேன் இந்தியாவுக்கு எதுக்காக வந்திருக்கார்” சந்தேகமாக கேட்டாள் கீதா.

”எனக்கும் தெரியலை. ஆனா அது சூப்பர்மேன்தான் அப்படின்னு யாருக்கும் உறுதியா தெரியாது. உன்னையும் என்னையும் தவிர!” என்றால் லூயிஸ் லேன்.

”இதுக்கும் பிரெஸிடெண்ட் வரதுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா?” குழப்பமாக கேட்டாள் கீதா.

”பிரெஸிடெண்டுக்கு தீவிரவாதிகள்னால வேணும்னா ஆபத்து வரலாம். அதுவும் சிஐஏ, வெளியுறவு துறையோட பாதுகாப்புகளை மீறி வர முடிஞ்சா..!”

”தீவிரவாதிகளை வளர்த்து விடுறதே அமெரிக்காதானாம்! எல்லாரும் சொல்றாங்களே!” லூயிஸை சீண்டி பார்க்க ஆர்வமானாள் கீதா.

“எதை வெச்சு அப்படி சொல்ற?” லூயிஸ் கண்களில் ஒரு சந்தேகம் தென்பட்டது.

”எதை வெச்சு சொல்லணும்? அதான் நடமாடும் உதாரணமா முன்னாடியே இருக்கே வியட்நாம் யுத்தம்!”

”கீதா நீ என்ன தப்பா புரிஞ்சிட்டு இருக்க. நான் எந்த தத்துவங்கள் மேலயும் ஈடுபாடு கொண்டவள் இல்ல. உண்மையாவே அமெரிக்கா மேல தப்பு இருக்குனா அதை பத்தியும் எழுதக் கூடிய பத்திரிக்கையாளராதான் நான் இருந்திருக்கேன்” விளக்க முயன்றாள் லூயிஸ் லேன்

“நான் இதை சீரியசா கேட்கல லூயிஸ். நாம ஒன்னா வேலை செய்ய வேண்டியிருக்கதால ஒருத்தரோட அரசியல் நிலைபாடு பத்தி தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு. அதான் அப்படி பேசினேன். சரி சொல்லு உங்க பிரெஸிடெண்ட் இங்க வரதை பத்தி என்ன நினைக்கிற. அவர் பாகிஸ்தான் – இந்தியா நடுவுல உண்மையாவே அமைதியை ஏற்படுத்த போறாரா? இல்ல ஆபத்தை குடுக்க போறாரா?”

”அவர் அமைதியை உண்டாக்க முயற்சி பண்ணலாம்.  ஆனா அவருக்கு இங்க ஏதாவது ஆச்சுனா அது எல்லாருக்கும் ஆபத்தா முடியும்”

”அவரை யார் என்ன பண்ண போறா.. சூப்பர்மேனை வெச்சு அப்படி சொல்றியா?”

”ஆபத்து சூப்பர்மேனாலயோ, சக்திமானாலயோ இருக்க போறதில்ல. அவங்க இங்க இருக்காங்கன்னா வேற ஆபத்தும் கூட இங்க இருக்கலாம்” லூயிஸ் எண்ணங்கள் எங்கெங்கோ சுழல தொடங்கின.

திடீரென சுயநினைவு பெற்றவளாய் “இப்போ நாம இதை பத்தி யோசிக்கிறதை விடவும் கங்காதர், க்ளார்க் என்ன ஆனங்கன்னு யோசிக்க வேண்டியது அவசியம்” என்றாள் லூயிஸ்.

“உனக்கு கங்காதர் பத்தி தெரியாது. அவரோட சேர்ந்தாலே செய்ய வேண்டிய எல்லா விஷயத்தை பாழாக்கிடுவார். எப்படியும் விடியுறதுக்குள்ள ஏதாவது ஃப்ளைட்டை புடிச்சி வந்திடுவாங்க. அப்போ பேசிக்கலாம்” என்றபடி படுக்கையில் வீழ்ந்தாள் கீதா.

அமெரிக்க தூதரகம், டெல்லி

இரவு நேரமென்றும் பாராமல் தூதரகத்தின் அடிதளத்தில் தீவிரமாக பணிபுரிந்து கொண்டிருந்தனர் அமெரிக்க ஊழியர்கள் சிலர். கட்டுப்பாட்டு அறையினுள் விமான விபத்தின் காட்சிகளை ஆராய்ந்து கொண்டிருந்தார் சிஐஏ அதிகாரி மைக் ஆலன். அவருக்கு விபத்து காட்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தான் இளம் ஊழியரான பெஞ்சமின்.

“பேஞ்சமின் நம்ம ஸ்பை சேட்டிலைட்ல பதிவான Footagesஐ எடு.. விமானத்தை எது தாக்குனுச்சுன்னு எனக்கு தெரிஞ்சாகணும்!”

சாட்டிலைட் காட்சிகள் முன்னாள் இருந்த பெரிய திரையில் தெரிந்தது. அதில் சூப்பர்மேனும், சக்திமானும் விமானத்தை நோக்கி பறந்து வரும் காட்சிகள் தெரிந்தன.

”சூப்பர்மேனோட இருக்கது யாரோ சக்திமான்னு சொல்றாங்க.. யார் அந்த சக்திமான்? ஏதாவது டீட்டெய்ல்ஸ் கிடைச்சுதா?”

“நம்ம ஏஜெண்ட்ஸ் அவரை பத்தி தேடிட்டு இருக்காங்க சார்.. சக்திமான் பத்தி ஒரு பெண் ரிப்போர்ட்டர்தான் அதிகம் எழுதி இருக்காங்களாம்” பெஞ்சமின் தெரிந்த அளவு பதிலை சொன்னான்.

”அந்த ரிப்போர்ட்டர் பத்தி ஏதாவது தகவல் கிடைச்சா சொல்லு பென். இவங்க ரெண்டு பேரும் ஒன்னா வந்து விமானத்தை காப்பாத்தறத பாத்தா நண்பர்களா இருப்பாங்கன்னு நினைக்கிறேன்” என்றபடி குறுந்தாடியை சொறிந்து விட்டுக் கொண்டார் ஆலன்.

”சார்.. அவசரப்பட வேணாம். இதையும் கொஞ்சம் பாருங்க! இது ஃப்ளைட் ஆக்ஸிடெண்ட் ஆகுறதுக்கு கொஞ்ச முன்னாடி ரெக்கார்ட் ஆனது” என்று ஒரு வீடியோவை பெரிய திரையில் காட்டினான் பெஞ்சமின்.

அதில் சூப்பர்மேன் சக்திமான் மீது லேசரை பாய்ச்சுவதும் அது தவறி விமானத்தை தாக்குவதும் தெரிந்தது. ஆலன் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.

“ஓ மை காட்.. இது இன்னும் பெரிய தலைவலியா இருக்க போகுது” ஆலன் நொந்துக் கொண்டார். அப்போது கதவை திறந்து கொண்டு ஒரு அதிகாரி உள்ளே நுழைந்தார்.

”சார் சக்திமான் பத்தி எழுதுன அந்த ரிப்போர்ட்டர் பேரு கீதா விஸ்வாஸ்” என்றார் நுழைந்த வேகத்தில்..

“இப்போ அந்த ரிப்போர்ட்டர் எங்க இருக்காங்க?”

”சார் அவங்களும் டெல்லியிலதான் இருக்காங்க.. இன்னைக்கு சூப்பர்மேன் காப்பாத்துன அதே விமானத்துலதான் அவங்க வந்திருக்காங்க..!”

“சூப்பர்மேன் காப்பாத்துன விமானத்துலயா?’ மறுபடி எதிரே இருந்த திரையை நோக்கினார் ஆலன். சூப்பர்மேனின் லேசர் சக்திமானை நெருங்கி கொண்டிருந்தது அந்த வீடியோவில்..

“சார் அந்த ரிப்போர்ட்டரோட டெய்லி ப்ளானட் ரிப்போர்ட்டர் லூயிஸ் லேனும் பயணம் பண்ணி இருக்குறதா டாக்குமெண்ட்ஸ்ல இருக்கு சார்”

“சரி.. அந்த ரிப்போர்டர்ஸ் மேல ஒரு கண்ணு வெச்சிக்கோங்க”.. ஆலன் சொல்லிக் கொண்டிருக்கும்போது திரையில் தெரிந்த வீடியோக்கள் சிதைந்து தெரிய தொடங்கின.

“பெஞ்சமின் என்னாச்சு?”

“யாரோ நம்ம சிஸ்டத்தை ஹேக் பண்றாங்க சார்.. அவங்க இந்தை வீடியோ ஃபைல்ஸை திருடுறாங்க”

“உடனே ஏதாவது பண்ணு பென்” உரக்க கத்தினார் ஆலன்.

ஆனால் திரையில் இருந்த வீடியோக்கள் முழுவதுமாக மறைந்து போனது. இருட்டு திரையில் ஒரு முத்திரை தெரிந்தது. அதன் கீழே Lider என்று இருந்தது.

ஆலனும், பெஞ்சமினும் அதிர்ச்சியாய் அந்த திரையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தொடரும்

Leave a comment