சூப்பர்மேன் Vs சக்திமான் – பகுதி 7

கெல்சாங் மடாலயம், இமயமலை

இருள் போர்த்திய இமயமலையின் மீது பௌர்ணமி நிலவின் ஒளி பட்டு வெள்ளி போல பிரகாசித்துக் கொண்டிருந்தது. கெல்சாங் மடாலயத்தின் வாசல் காவல் கோபுரத்தின் மீது வீசும் குளிரில் காவலுக்கு நின்றிருந்தான் 16 வயது சிறுவன் யோதா. வீசிய பனிக்காற்று மடாலயத்தையே நடுங்க செய்து கொண்டிருந்தது. ஆனால் யோதாவிடம் துளி நடுக்கமில்லை. அவன் நெஞ்சம் வஞ்சனையால் வீழ்த்தப்பட்டதை எண்ணி நெருப்பாய் கனன்று கொண்டிருந்தது. அதற்குமுன் இமயமலையின் பனி எம்மாத்திரம்…

”நீ ரொம்ப கோபமாக இருக்கிறாயா யோதா?” காவல் கோபுரத்தின் மீது ஏறி வந்தார் மடாலய நிர்வாகிகளில் ஒருவரான மெய்ஜி.

”கோபமாய் இல்லை குருவே.. ஏமாற்றத்தில் இருக்கிறேன்!” கைகளை முறுக்கிக் கொண்டான் யோதா.

“குரு கெல்சாங் உன்னை தண்டித்ததை எண்ணி கவலைப்படுகிறாயா?”

“நான் அந்த மாணவர்களை தாக்கவில்லை என்று அவருக்கு தெரிந்தும் என்னை தண்டிக்கிறார்!” யோதாவின் கண்களில் நீர் அரும்பியது.

”யோதா உன் கோபம் காரணமற்றது. குரு கெல்சாங் எதையும் காரணமின்றி செய்பவர் அல்ல. நீ உனது சக்திகளையும், மனதையும் கட்டுப்படுத்த இன்னமும் பயிற்சி தேவை”

”உண்மை ஒன்றிருக்க பொய்தான் வெல்கிறது. பிறகெதற்கு பயிற்சி?” யோதாவின் கோபம் மெய்ஜிக்கு புரிந்தது.

”யோதா உனது சக்திகளை கட்டுப்படுத்த கற்று கொண்ட அளவிற்கு உனது மனதை கட்டுப்படுத்த நீ பழகவில்லை. உலகில் நன்மை, தீமை என்று எதுவும் இல்லை. உண்மை, பொய் என்றும் எதுவும் இல்லை. பார்க்கும் மனங்களில்தான் அது இருக்கிறது. நீ ஒன்றை எதைக் கொண்டு பார்க்கிறாயோ அதுவாகவே அது தெரியும்”

“அப்படின்னா தீமை இல்லாத உலகம் என்பதெல்லாம் வெறும் கற்பனைதானா குருவே”

“தீமைகளை அழிக்கதான் கெல்சாங் உன் போன்ற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார் யோதா. சரியாக நினைவில் கொள் அழிக்க வேண்டியது தீமையைதானே தவிர தீமை செய்பவர்களை அல்ல”

”எது நன்மை, எது தீமை என்பதை எப்படி புரிந்து கொள்வது குருவே?”

“அதற்கு நீ இன்னும் தயாராக வேண்டும் யோதா”

டெல்லி, தலைநகர்

சிஐஏ அதிகாரி ஆலன் கீதாவிடம் விசாரித்துக் கொண்டிருந்தபோது தீடீரென டெல்லியின் புறநகர் பகுதியில் விழுந்து வெடித்தது ஒரு மர்ம பொருள். அதனால் ஏற்பட்ட அதிர்வலைகளால் கார் கண்ணாடிகள் நொறுங்கி காற்றில் பறந்தன. ஹோட்டல் முகப்பில் நின்றிருந்த ஆலன், பெஞ்சமின் உள்ளிட்ட அனைவரும் காற்றில் தூக்கியெறியப்பட்டனர். சிறிது நேரத்தில் நிதானம் திரும்பி அவர்கள் எழுந்தபோது மக்கள் பலர் பயத்தில் ஹோட்டலை நோக்கி தஞ்சம் புக ஓடி வந்து கொண்டிருந்தார்கள். தொலைவில் குண்டு விழுந்த பகுதி புகை மூட்டமாக தெரிந்தது.

”பெஞ்சமின் உடனே நம்ம டீம்க்கு தகவல் கொடு” என்றபடி பாய்ந்து சென்று காரின் ட்ரைவர் சீட்டில் அமர்ந்து புறப்பட்டார் ஆலன். பின் இருக்கையில் கீதாவும், லூயிஸும் அமர்ந்தார்கள்.

“நீங்க எங்க வறீங்க?”ஆலன் குழப்பமாக கேட்டார்.

“சக்திமான் பத்தி கேட்டீங்கல்ல.. எங்களை அந்த இடத்துக்கு கூட்டிப் போங்க.. அறிமுகப்படுத்தி வைக்கிறேன்” என்றாள் கீதா.

“க்ளார்க்கும், கங்காதரும் எங்க?” என்றாள் லூயிஸ்.

ஹோட்டலுக்குள் ஓடிக்கொண்டிருந்த மக்களோடு அவர்களை போலவே யாரோ ஓடிக்கொண்டிருப்பதை இருவரும் பார்த்தனர். நால்வருடன் கார் மின்னலென குண்டு வெடித்த இடம் நோக்கி வேகமாக புறப்பட்டது.

சக்திமானும், சூப்பர்மேனும் ஏற்கனவே குண்டு வெடித்த இடத்தை அடைந்திருந்தார்கள்.

“ஹலோ… எமெர்ஜென்சி.. இங்க அவுட்டோர்ல குண்டு வெடிப்பு நடந்திருக்கு.. தீவிரவாதிகள் வேளையா இருக்கலாம்.. எங்களுக்கு உடனே படைகள் தேவை, செண்ட்ரல் டெல்லில இருக்க சோல்ஜர்ஸை உடனே அனுப்பி வைங்க” ஹெலிகாப்டரில் விரைந்து கொண்டிருந்தார் இந்திய ராணுவ அதிகாரி நிர்மல் ஜிட் சிங்.

சூப்பர்மேனும், சக்திமானும் அங்கிருந்த மக்களை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். பெரும் கட்டிடம் ஒன்றின் அடிவாரத்தில் மூதாட்டி ஒருவர் கான்க்ரீட் கற்கள் அடியில் சிக்கியிருந்தார். நொடிப்பொழுதியில் அருகே நிலைக்கொள்ளாமல் இருந்த கட்டிடம் சரிந்து கீழே விழத் தொடங்கியது. சட்டென பாய்ந்த சூப்பர்மேன் அந்த கட்டிடத்தை தடுத்து நிறுத்தினார். அதற்குள் சக்திமான் கான்க்ரீட் கற்களுக்குள் சிக்கிய மூதாட்டியை பத்திரமாக மீட்டு கொண்டு வந்தார்.

இருவரும் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தபோது ஆலனின் கார் சம்பவ இடத்தை வந்தடைந்தது.

“சக்திமான்” காரிலிருந்து இறங்கிய வேகத்தில் கீதா கத்தினாள். சக்திமான் அருகே வந்தார்.

”ஹலோ ஆலன் உடனடியாக உங்க ஆட்களை வர சொல்லி இந்த மக்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு போக சொல்லுங்க” என்றார் சக்திமான்.

”இங்க என்ன நடந்திட்டிருக்கு.. நீங்க.. ஒரு நிமிஷம் என் பேரு எப்படி உங்களுக்கு தெரியும்” குழப்பமாக கேட்டார் ஆலன்.

அதற்குள் சக்திமான் எதையோ கண்டு உஷார் அடைந்தார். “எல்லாரும் கீழ குனிங்க” என்றபடி காரை மறித்து நின்றார் சக்திமான் எங்கிருந்தோ வந்த சில தோட்டாக்கள் அவர் முதுகில் மோதி சிதறி கொட்டின. சக்திமான் உற்று நோக்கினார். சுற்றுப்பகுதிகளிலிருந்து பயங்கர ஆயுதங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று உள்ளே நுழைந்தது. அவர்கள் தீவிரவாதிகள் போல உடை அணிந்திருந்தனர்.

அவர்களை கண்டதும் வானத்திலிருந்த சூப்பர்மேன் வேகமாக அவர்களை நோக்கி விரைந்தார். ஆனால் அதற்குள் அவரை பின்னாலிருந்து பச்சை நிற ஒளி ஒன்று தாக்கியது அதனால் நிலைகுலைந்த அவர் ஒரு கட்டிடத்தில் மோதினார். உடனடியாக செயல்பட்ட சக்திமான் ஆலன், பெஞ்சமின், கீதா மற்றும் லூயிஸை பாதுகாப்பான ஒரு பகுதியில் தூக்கி சென்று நிறுத்தினார்.

பிறகு வேகமாக சூப்பர்மேன் விழுந்த இடத்தை நோக்கி விரைந்தார். அதற்குள்ளாக அந்த தீவிரவாத குழு அவரை சரமாரியாக சுடத்தொடங்கினர். ஆனால் தோட்டாக்கள் அவர்மீது மோதி சில்லறை காசுகள் போல கீழே கொட்டிக்கொண்டிருந்தன. அதற்குள் தன்னிலை அடைந்த சூப்பர்மேன் கட்டிடத்தை உடைத்துக் கொண்டு வெளியேறினார். மேலே வானத்தில் சூப்பர்மேனை தாக்க தயாராக நின்றது டாக்டர் ஜக்காலின் ஸ்பேஸ்ஷிப். சூப்பர்மேன் ஷிப்பை நோக்கி வரவும் மீண்டும் பச்சை நிற கதிர்களை சூப்பர்மேனை நோக்கி செலுத்தியது ஸ்பேஸ்ஷிப். உடனடியாக குறுக்கே வந்த சக்திமான் அந்த பச்சை ஒளியை தன் நெஞ்சில் தாங்கி கொண்டார்.

“சூப்பர்மேன் நீ தீவிரவாதிகளை பாத்துக்கோ.. ஜக்காலை நான் கவனிச்சிக்கிறேன்” என்றார் சக்திமான்.

அதற்குள்ளாக தீவிரவாத கும்பல் மக்களை நோக்கி சுடத் தொடங்கியிருந்தார்கள். தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொண்டே முன்னேறிக் கொண்டிருக்க மறைவாய் ஒரு தூணின் அருகே காத்திருந்தான் பெஞ்சமின். தூணை நெருங்கியதும் சட்டென்று பெஞ்சமின் தாவி தீவிரவாதியை தாக்கினான். அதேசமயம் தீவிரவாதி துப்பாக்கி விசையை அழுத்திவிட ரத்தம் சிதற கீழே சரிந்தான் பெஞ்சமின். அதேசமயம் அவன் விட்ட குத்து சரியாக சென்று சேர்ந்ததால் தீவிரவாதியும் மயங்கி கிடந்தான்.

பெஞ்சமினுக்கு ஏற்பட்ட இந்த நிலையை கண்டு அலறி ஓடி வந்தார் ஆலன். பெஞ்சமினை நிமிர்த்தி பார்த்தார் நல்லவேளையாக குண்டு வலது கையில் துளைத்து சென்றிருந்தது. அப்போதுதான் தீவிரவாதியின் சட்டையில் இருந்த பேட்ஜை பார்த்தார் ஆலன். ஃபைல்கள் திருடப்பட்டபோது தெரிந்த அதே ஸ்டார் முத்திரை. “லிடர்” என தனக்குள் சொல்லிக் கொண்டார் ஆலன்.  தீவிரவாதியின் துப்பாக்கியை ஒரு கையில் எடுத்துக் கொண்டு, மறுபக்கம் தோளில் பெஞ்சமினை தாங்கி கொண்டு நகரத் தொடங்கினார் ஆலன்.

தீவிரவாதிகளுக்கு அஞ்சிய மக்கள் அறை ஒன்றில் ஒளிந்திருந்தனர். கதவை சரமாரியாக சுட்ட பயங்கரவாதிகள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். அப்போது உத்திரத்தை உடைத்துக் கொண்டு ஏதோ ஒன்று அவர்கள் முன் விழுந்தது. புழுதி அடங்க தொடங்கிய போது எஸ் முத்திரை தெளிவாக தெரியத் தொடங்கியது. மக்கள் நம்பிக்கையோடு சூப்பர்மேனை பார்த்தனர். உஷாரான பயங்கரவாதிகள் துப்பாக்கி விசையை அழுத்துவதற்குள் மின்னல் வேகத்தில் அவர்கள் முகத்தில் பயங்கரமாக ஏதோ மோதியது போல இருந்தது. அடுத்த நோடி வாய்களில் ரத்தம் கொப்பளிக்க அவர்கள் தரையில் சரிந்தனர்.

அதேசமயம் வானத்தில் சக்திமான் டாக்டர் ஜக்காலிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்.

“ஹே..சக்திமான்.. சூப்பர்மேனுக்கு நீ வக்காலத்தா.. இந்தா வாங்கிக்கோ” என்றபடி லேசர் கதிர்களை சக்திமான் மேல் பாய்ச்சினான். அது சக்திமானை பெரிதாக தாக்கவில்லை. பவரை அதிகப்படுத்தி மீண்டும் தாக்கினான். இப்போது கொஞ்சம் வேலை செய்தது. சக்திமான் நிலைகுலைந்து விழ போனார். பிறகு சமாளித்து மீண்டும் ஸ்பேஸ்ஷிப்பை நோக்கி பறந்தவர் தன் கைகளை ஸ்பேஸ்ஷிப்பை நோக்கி நீட்டினார். அதிலிருந்து பாய்ந்த லேசர் கதிர்கள் ஜக்காலின் ஷிப்பை தாக்கின. ஆனால் ஷிப்பை சுற்றி பாதுகாப்பு கவசம் இருந்ததால் அது பெரிதாக எடுபடவில்லை.

கீழே ஆலன் ஒருபக்கம் போராடிக் கொண்டிருந்தார். ”ஹலோ.. டீம் உடனே டிசாஸ்டர் ஏரியாவுக்கு வாங்க.. ஆபத்து” தனது சேட்டிலைட் போன் மூலமாக தகவல் அனுப்பினார்.

”சார் என்னைப்பத்தி கவலைப்படாதீங்க.. ரிப்போர்டர்ஸ கூட்டிக்கிட்டு நீங்க இங்கிருந்து போங்க” என்றான் பெஞ்சமின். கையில் குண்டடி பட்டு ரத்தம் விரயமாகி இருந்ததால் சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தான். கீதாவும், லூயிஸும் அவனது கைகளில் கட்டுப்போட்டு முடிந்தளவு ரத்தப்போக்கை குறைக்க முயற்சித்தனர்.

”என்ன பென்.. வந்ததுமே இந்திய படம் ஏதாவது பாத்தியா.. க்ளைமேக்ஸ்ல சைடு ஹீரோ பேசுற மாதிரி பேசுற.. ஒழுங்கா எழுந்து எங்க கூட வா.. நீ இல்லைனா எனக்கு யார் காஃபி வாங்கி தருவா” என்றபடி கை கொடுத்து பென்னை தூக்கினார் ஆலன்.

துப்பாக்கியோடு வந்த பயங்கரவாத கும்பலை சூப்பர்மேன் சிதறடித்த நிலையில் ஒரு சிலரே எஞ்சியிருந்தனர். அதேசமயம் வானில் ஜக்காலின் ஷிப் நடத்தும் தாக்குதலை சக்திமான் சமாளித்தாலும் திரும்ப தாக்க முடியாமல் சோர்ந்து போக தொடங்கினார். சக்திமானுக்கு உதவ சூப்பர்மேன் வானத்தை நோக்கி விரைந்தார்.

”வா.. சூப்பர்மேன்.. உனக்கு ஒரு சிறப்பு பரிசு வெச்சிருக்கேன்” என்றபடி சூப்பர்மேனை குறி வைத்தான் ஜக்கால். பிறகு ஒரு பட்டனை அழுத்தியதும் ஷிப்பிலிருந்து கிளம்பிய பந்து போன்ற ஒரு பொருள் சூப்பர்மேன் அருகே சென்று திறந்தது. அதிலிருந்து வெளியான சிலந்தி போன்ற ஒன்று சூப்பர்மேனின் கழுத்தில் பதிந்தது. உடனே சூப்பர்மேன் நிலை குலைந்து பூமியை நோக்கி விழ தொடங்கினார்.

அதை பார்த்த லூயிஸ் “சூப்பர்மேன்” என கத்திக்கொண்டு ஓடி வந்தாள். அவளோடு கீதாவும் ஓடினாள். “நோ.. அந்த பக்கம் போகாதீங்க” என்று கத்தினார் ஆலன். அதற்குள் அவர்கள் இருவர் மீதும் வானிலிருந்து ஒரு ஒளி பாய்ந்தது. நொடி பொழுதில் அவர்கள் நின்ற இடத்திலிருந்து அவர்கள் மறைந்து போயிருந்தார்கள். சக்திமான் தனது முழு சக்தியையும் திரட்டி ஜக்காலின் ஷிப்பை தாக்க முன்னே சென்றார்.

அதற்குள் கீழே விழுந்த சூப்பர்மேனிடம் இருந்து வெளிப்பட்ட கட்டற்ற லேசர் ஒளி மேலே பறந்து கொண்டிருந்த சக்திமானை தாக்கியதால் தூக்கி வீசப்பட்டார். மேலும் சூப்பர்மேனின் லேசர் கதிர்கள் பட்டு அருகே இருந்த கட்டிடங்கள் நொறுங்கி விழத் தொடங்கின. கட்டிடம் இடிந்து விழும் முன்பாக பெஞ்சமினுடன் அங்கிருந்து வெளியேறி தப்பிதார் ஆலன்.

சூப்பர்மேனின் கதிர்கள் பட்டு வான்வழியாக குண்டு வெடித்த பகுதிக்கு விரைந்துக் கொண்டிருந்த இந்திய ராணுவ ஹெலிகாப்டர் தாக்கப்பட்டு நிலைகுலைந்து பூமியை நோக்கி சென்றது. சூப்பர்மேனால் தாக்கப்பட்ட சக்திமான் நிதானமடைந்து வேகமாக சென்று ஹெலிகாப்டர் பூமியில் மோதாமல் நிறுத்தினார். தன்னுடன் வந்த சக ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டதை கண்ட இந்திய ராணுவ அதிகாரி நிர்மல் ஜிட் சிங் “இங்க ஏதோ ஆபத்தான ஒன்னு இருக்கு. ராணுவ படைகள் முடிஞ்ச வேகத்துல வாங்க” என்று தகவல் அளித்தார். பிறகு ஹெலிகாப்டர் இயக்கிய வீரரிடம் சூப்பர்மேனை தாக்குமாறு சைகை செய்தார்.

அதற்குள் ஒருவழியாக கழுத்தில் இருந்த சிலந்தியை பிடுங்கி எறிந்த சூப்பர்மேன் தனது லேசர் சக்தியையும் கட்டுப்படுத்தினார். அப்போது இந்திய ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து வெளியான குண்டுகள் சூப்பர்மேன் மீது மோதி வெடித்தன. இதனால் அந்த பகுதியே அணுகுண்டு வெடித்தது போல காணப்பட்டது. சூப்பர்மேனால் காப்பாற்றப்பட்ட மக்கள் தொலைவிலிருந்து சோகமாக அந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அங்கு குண்டுகள் வெடித்த நெருப்பு அடங்கியபோது சூப்பர்மேன் அங்கு இல்லை. ராணுவ துருப்புகள் அங்கு காயம்பட்டு கிடந்த பயங்கரவாதிகளை கைது செய்து கொண்டு சென்றனர். அந்த பகுதியில் சூப்பர்மேன் மட்டும் இல்லை.

”அவன்.. செத்திருப்பானா சார்?” என்றான் ஹெலிகாப்டரில் வந்த ராணுவ வீரன்.

”இல்ல.. ஆனா சாக போறான்..” என்றபடி தந்து ரிசீவரை எடுத்த நிர்மல் ஜிட் சிங் “எல்லா படைகளுக்கும் அவசர வார்னிங்.. இந்தியாவுக்கு ஒரு மிகப்பெரிய ஆபத்து. சக்திமான் அப்பறம் சூப்பர்மேன்.. இவங்களால இந்த நாட்டுக்கு அச்சுறுத்தல். அவங்களை எங்க பாத்தாலும் பிடிக்கவோ அல்லது சுட்டுக் கொல்லவோ எல்லா படைகளுக்கும் உத்தரவிடுறேன்”

தொடரும்

Leave a comment