சூப்பர்மேன் Vs சக்திமான் – பகுதி 8

ஒளி புக முடியாத இருள் சூழ்ந்த பாதாள சிறை ஒன்றில் மஞ்சள் நிற பல்புகள் வரிசையாக தொங்கி கொண்டிருந்தன. அதன் நடுவே தனது சக அதிகாரிகளுடன் கண்களில் கோபம் கொப்பளிக்க வந்து கொண்டிருந்தார் ஜெனரல் நிர்மல் ஜிட் சிங். மிகவும் பாதுகாப்பாக பூட்டப்பட்ட அறை ஒன்றின் முன்னால் ஆயுதமேந்திய காவலர்கள் நின்று கொண்டிருந்தனர். ஜெனரலை பார்த்ததும் சல்யூட் செய்த அவர்கள் கதவை திறந்து விட்டார்கள். உள்ளே கைகளில் விலங்கு மாட்டப்பட்டு மர நாற்காலி ஒன்றில் உட்கார வைக்கப்பட்டிருந்தான் லிடர் பயங்கரவாதிகளில் ஒருவன். ராணுவத்தினரால் பயங்கரமாக தாக்கப்பட்டதில் வாய் உடைந்து ரத்தம் வெளியேறி உறைந்திருந்தது. ஒரு கண் மட்டும் பலமாக வீங்கி இருந்தது. வேகமாக உள்ளே நுழைந்தார் நிர்மல் ஜிட் சிங்.

”இங்க பாரு உன்கிட்ட மானே தேனேன்னு கொஞ்சி பேசி இதுக்கெல்லாம் காரணம் யாருன்னு கேக்குற அளவுக்கு எனக்கு பொறுமை கிடையாது. என் கேள்வி ஒன்னே ஒன்னுதான். உங்க கூட்டத்தோட தலைவன் யாரு? சொன்னினா சாவறதுக்கு கொஞ்சம் அவகாசம் கிடைக்கும். இல்லைன்னா..” என்றபடி தனது துப்பாக்கியை உருவினார்.

”நான் சொல்லிடுறேன்.. எங்க தலைவர்… அவர்.. பேரு.. சூப்பர்மேன்”

அந்த வார்த்தையை கேட்டதும் நிர்மல் ஜிட் சிங்குடன் வந்த அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். ஆனால் நிர்மல் ஜிட் சிங் முகத்தில் கோபம் கொப்பளிக்க தொடங்கியது. அப்போது அவரது வாக்கி டாக்கி “பீப்..பீப்” என ஒலிக்க தொடங்கியது. அதை ஆன் செய்தார்..

“சார்.. நீங்க உடனே மேல வந்து இதை பாக்கணும்!”

அமெரிக்க வெளியுறவுத்துறை அலுவலகம், டெல்லி

உளவுத்துறை அதிகாரி ஆலன் இரண்டு கைகளிலும் காஃபி ஏந்தியபடி அவரது அறைக்குள் நுழைந்தார். அறையின் மற்றொரு பக்க மேசையில் பெஞ்சமின் அமர்ந்திருந்தான். குண்டு துளைத்ததில் காயம்பட்டவனுக்கு அதிர்ஷ்டவசமாக பெரிய இழப்பு ஏதுமில்லை. குண்டு எலும்பு பகுதி வரை தாக்கியதால் குண்டை எடுத்து விட்டு தையல் போட்டு வலதுகையில் கட்டுப்போட்டு விட்டிருந்தார்கள். ஆலன் ஓய்வெடுக்க சொல்லியும் கேட்காமல் பென் தீவிரமாக கணிப்பொறியில் மூழ்கியிருந்தான். ஆலன் காபி கப்பை கொண்டு வந்து அவன் டேபிளில் வைத்தார்.

”சார்.. நீங்க ஏன் இதெல்லாம் செஞ்சிகிட்டு..” பென் பதறினான்..

“பரவாயில்ல பென்.. இட்ஸ் ஓகே.. உனக்கு கை சரியானதும் நீதான் எனக்கு காபி வாங்கி தரணும்.. மறந்துடாத.. அந்த ரிப்போர்ட்டர்ஸ்க்கு என்ன ஆச்சுன்னு கண்டுபிடிக்க முடிஞ்சதா?”

“அதைதான் சார் தேடிட்டு இருக்கேன்.. அங்க வெடி விபத்து நடந்தப்போ ஏற்பட்ட ரேடியேஷன்னால சாட்டிலட் இமேஜஸ் சரியா பதிவாகலை.. அதை இன்னும் கொஞ்சம் ப்ராசஸ் பண்ணியாக வேண்டி இருக்கு சார்.. சூப்பர்மேனும், சக்திமானும் என்ன ஆனாங்க சார்?”

“அவங்கள கொல்ல சொல்லி ஜெனரல் உத்தரவிட்டுருக்காரு.. ஆனா அதிகாரப்பூர்வமா இல்ல. இந்த தாக்குதலுக்கு அவங்களும் ஒரு காரணம்னு இந்திய ராணுவமும், உளவுத்துறையும் நினைக்குது..” ஆலன் மௌனமானார்.

”சார் அந்த தீவிரவாதிகள் பத்தி தேடுனதுல செர்பியால லிடர்னு எந்த அமைப்பும் இல்ல.. அது தன்னிச்சையா உருவாக்கப்பட்ட அமைப்புன்னு தோணுது” என்ற பென் தனது காபியை கொஞ்சம் குடித்துக் கொண்டான்.

”யாரோ திட்டம் போடுறாங்க பென்.., மிகப்பெரிய சதித்திட்டம்!” ஆலன் சிந்தனையில் மூழ்கியவராய் சுவரை பார்த்தப்படி உறைந்து நின்றார்.

அப்போது அலுவலகத்தில் இருந்த தொலைக்காட்சியில் அவசர செய்தி ஒன்று ஒளிபரப்பாக தொடங்கியது. “முக்கிய செய்திகள். டெல்லியில் நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து எங்கள் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வந்த முக்கியமான வீடியோவை உங்களுக்காக ஒளிபரப்புகிறோம்” என்றபடி அதில் ஒரு வீடியோ ஒளிபரப்பானது. சூப்பர்மேன் கட்டுக்கடங்காமல் லேசர் கதிர்களை வீசி கட்டிடங்களை தாக்கும் காட்சிகள் திரையில் தெரிந்தன. “விமானத்தை காப்பாற்றியதாக புகழப்பட்ட இந்த சூப்பர்மேன் தான் இந்த தாக்குதல்களை செய்தவர் என்பது கண்கூடாக நிரூபனமாகியுள்ளது. மேலும் மக்களை காப்பாற்றிய சக்திமானையும் இவர் தாக்கியுள்ள காட்சிகள் பதிவாகியுள்ளன”… அளவில்லாத லேசர் கதிர் வெளிப்பட்டு சக்திமானை தூக்கி வீசும் காட்சிகள் தெரிய தொடங்கின.

அங்கே ராணுவ தளத்தில் நிர்மல் ஜிட் சிங்கும் இதை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மட்டுமல்ல ஒவ்வொரு வீட்டிலும் உள்ள தொலைக்காட்சிகளிலும், வணிக வளாகங்களில் உள்ள தொலைக்காட்சிகளிலும் இதுவே ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. மக்கள் பயத்தோடு அதை பார்த்துக் கொண்டிருந்தனர். கூட்டத்தோடு கூட்டமாக கண்ணாடி போட்டுக் கொண்டு சாதுவாக நின்ற கங்காதரும் அதை பார்த்துக் கொண்டிருந்தார்.

நியூஸ்..”அதுமட்டுமல்ல.. டெல்லியில் விபத்துக்குள்ளான விமானத்தை தாக்கியதும் சூப்பர்மேன் என தெரிய வந்துள்ளது” என்றதும் சூப்பர்மேன் வீசிய லேசர் கதிர்கள் விமானத்தை தாக்கும் வீடியோ ஒளிபரப்பானது. அதை கண்டதும் ஆலன் அதிர்ச்சியடைந்தார்.

”சார் அது நம்ம சர்வரை ஹேக் பண்ணி எடுத்த வீடியோ” பென் அதிர்ச்சியாக சொன்னான்.

நியூஸ்.. “இதன்மூலம் இங்கு நடந்த தாக்குதல் சம்பவங்களை சூப்பர்மேன் தான் செய்தார் என்பது நிரூபணமாகியுள்ள நிலையில் அரசு இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என மக்கள் கேட்டு வருகின்றனர்………” என்றபடி நியூஸ் போய் கொண்டிருக்க நிர்மல் ஜிட் சிங் யோசனையாக நின்று கொண்டிருந்தார்.

”சார்.. இப்போ என்ன பண்ணலாம்?” என்று கேட்டார் சக அதிகாரி ஒருவர்.

” இந்த வீடியோவெல்லாம் அந்த டிவி சேனலுக்கு எப்படி கிடைச்சதுன்னு விசாரிங்க. அப்புறம் பிரெஸிடெண்ட்கிட்ட டெத் வாரண்ட் அப்பீல் பண்ண சொல்லி கேப்போம்”

”சக்திமான், சூப்பர்மேன் ரெண்டு பேருக்குமா சார்?”

“இல்ல சூப்பர்மேனுக்கு மட்டும்”

அங்கே அமெரிக்க உளவுத்துறை அலுவலகத்தில்..

“சார்.. யாரோ வேணும்னே சூப்பர்மேனை பயங்கரவாதியா காட்ட நினைக்கிறாங்க”

“எது எனக்கு மட்டும் தெரியாதுன்னு நினைக்கிறியா பென்.. முதல்ல நமக்கு ஆதாரம் தேவை. உடனே தேவை.. பாரன்சிக் ஆளுங்களை கனெக்ட் பண்ணு” என்றபடி தனது போனை எடுத்து சிம்ம குரலில் பேசத் தொடங்கினார் “வெடிக்குண்டு வெடிச்ச இடத்துல கலெக்ட் பண்ணுன சோர்ஸை செக் பண்ணி யார் ஆயுதம் குடுத்தான்னு கண்டுபிடிங்க.. உடனே கண்டுபிடிங்க” கட் செய்து விட்டு மற்றொரு எண்ணை தொடர்பு கொண்டார் “இந்திய ராணுவம் என்னென்ன நடவடிக்கை எடுத்துட்டு இருக்குன்னு உடனே எனக்கு தெரியப்படுத்துங்க. இது பிரெஸிடெண்ட்டோட உயிர் சம்பந்தப்பட்ட விஷயம்” மீண்டும் காலை கட் செய்தார்.

”பென்.. நம்ம சர்வரை யார் ஹேக் பண்ணுனான்னு கண்டுபிடி.. அட்லீஸ்ட் சாட்டிலைட் இமேஜசையாவது ப்ராசஸ் பண்ணு”

”நீங்க எவ்ளோ பண்ணுனாலும் எதிரியை கண்டுபிடிக்கலாம்.. ஆனா அவனை நெருங்க முடியாது.. அதுக்கு உங்களுக்கு உதவி தேவை” அறையின் இருட்டான பகுதி ஒன்றிலிருந்து சத்தம் கேட்க பதட்டமாக திரும்பி பார்த்தனர் பென்னும், ஆலனும். இருட்டிலிருந்து வெளியே தங்க சக்கரங்கள் மின்ன சக்திமான் தோன்றினார். இருவர் முகத்திலும் டென்சன் மறைந்து ஒரு புன்னகை தோன்றியது.

மும்பை துறைமுகம்

ஒரு கைதிகளை போல அல்லாமல் சகல வசதிகள் கொண்ட அறை ஒன்றில் லூயிஸையும், கீதாவையும் அடைத்து வைத்திருந்தான் டாக்டர் ஜக்கால். டிவியில் சூப்பர்மேன் குறித்து வெளியான வீடியோவை அவர்களும் பார்த்திருந்தார்கள்.

”இவங்க என்ன திட்டம் போடுறாங்க? சூப்பர்மேனை அழிக்கவா? இல்லை இந்தியாவை அழிக்கவா?” வருத்தமாக கேட்டாள் கீதா.

”ரெண்டும் இல்ல.. இவங்க ப்ளான் பிரெஸிடெண்டை கொல்றதா இருக்கணும். பழியை சூப்பர்மேன் மேல போட்டுட்டா ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்”

“அதுனால இவங்களுக்கு என்ன லாபம் இருக்க முடியும்?”

“இருக்கு கீதா.. கார்கில் போர் சமயத்துலதான் அமெரிக்க ஜனாதிபதி ஒருத்தர் முதல் தடைவையா இந்தியாவுக்கு ஆதரவா நிலைபாடு தெரிவிச்சிருக்கார். இப்போ ரெண்டு நாடுகளுக்கு இடையிலான சமாதனத்துக்கு வர அவர் செத்தா என்னாகும்?”

“கண்டிப்பா பெரிய போர் உருவாகும்”

“அதேதான்.. முதல் உலக போரும் இப்படியான ஒரு கொலையிலதான் தொடங்குனுச்சு.. இப்போ போர் உருவானா அது லெக்ஸுக்கு கொள்ளை லாபம்”

“எப்படி அவனுக்கு லாபம்?”

“ரெண்டு தரப்புக்கும் ஆயுதங்களை லெக்ஸ் கார்ப்பரேஷன் விற்பனை செய்வாங்க.. அது ஒன்னு போதும் அவன் உலக கோடீஸ்வரன் ஆக..”

“வாவ்.. வாவ்.. வாவ்.. நீங்க உண்மையாலுமே புலிட்சர் அவார்டுக்கு தகுதியானவங்கதான் மிஸ் லேன்” என்றபடி உள்ளே நுழைந்தான் லெக்ஸ் லூதர்.

”ஆனா.. என்னைப்பத்தி இப்படி அநியாயமான குற்றச்சாட்டுகளை நீங்க வைக்கக்கூடாது. பிரெஸிடெண்டை கொல்ற அளவுக்கு நான் மோசமானவன் கிடையாது. நான் ஒரு பிஸினஸ்மேன் அவ்வளவுதான்”

“லெக்ஸ் நீ எவ்ளோ பெரிய மேதையா வேணாலும் இருக்கலாம். ஆனா யானைக்கும் அடி சறுக்கும் அதை மறந்துடாத” கோபமாக சொன்னாள் கீதா.

“ஓ இண்டியன் ரிப்போர்ட்டர்.. சக்திமானை பத்தி கதை எழுதுறவங்கதானே.. சீ.. எப்போதும் ஏன் இந்த மாதிரி அரைவேக்காடு சூப்பர்ஹீரோக்களுக்கு மக்கள் இவ்ளோ சப்போர்ட் பண்ராங்க.. அங்க பாருங்க ஒரு பெரிய கட்டிடத்தை இடிக்க கிலோ கணக்குல ஆர்டிஎக்ஸ் தேவை. ஆனா அவன் வெறும் கண்ணால அழிக்கிறான்.. அவனுக்கா சப்போர்ட் பண்றீங்க?”

”போர் உருவாக்கி ஆயுதம் விக்கிற உன்ன மாதிரி ஆட்கள் சூப்பர்மேனை பத்தியோ, சக்திமானை பத்தியோ பேச தகுதியே கிடையாது” கத்தினாள் லூயிஸ் லேன்.

”ஆமா.. எனக்கு தகுதி கிடையாதுதான். என்ன பேச யாருக்கு தகுதி இருக்கு. நான் வித்த ஆயுதங்களால செத்தவங்களை விட இந்த சூப்பர்ஹீரோக்களால செத்தவங்க அதிகம் பாப்பா. ஆனா நீங்க அவங்களுக்குதானே சப்போர்ட் பண்றீங்க. சோ இதை நிறுத்தியாகணும். நான் பிரெஸிடெண்டை கொல்ல போறதில்ல. சூப்பர்மேன் மாதிரியான் ஆட்களால தேச தலைவர்களுக்கு ஆபத்துன்னு உணர்த்தியிருக்கேன்.

”அதுல உனக்கு என்ன அவ்ளோ அக்கறை”

“அக்கறை இல்லாம பின்ன.. சூப்பர்ஹீரோக்கள் இல்லாத உலகம்.. அதுதான் என்னோட கனவு..”

அதேசமயம் அமெரிக்க சிஐஏ ரகசிய அலுவலகத்தில்..

பெஞ்சமின் ஏதோ ஒன்றை கண்டுபிடித்துவிட்ட தோரணையில் ஆலனை நோக்கி ஓடி வந்தான். “சார்.. சாட்டிலைட் இமேஜஸை பிராசஸ் பண்ணுனதுல ஒரு விஷயம் தெரிய வந்திருக்கு. நீங்க இதை பாக்கணும்”

ஆலன் வந்து பார்த்தார். பென் விவரிக்க தொடங்கினான். “சார்.. இது டெல்லியில் குண்டுவெடிப்பு நடந்தப்போ கிடைச்ச இமேஜஸ். இதுல ஒரு ஸ்பேஷ்ஷிப் தெரியுது. இது தாண்டி மறையும்போது கீதாவும், லூயிஸும் மறைஞ்சி போயிருக்காங்க. அப்புறம் இது அன்னைக்கு விமான விபத்து நடக்குறதுக்கு முன்னாடி கிடைச்ச இமேஜஸ். இதுலயும் அந்த ஸ்பேஸ்ஷிப் தெரியுது”

பென் விவரித்துக் கொண்டிருக்க ஆலன் சிந்தனையில் ஆழ்ந்தார். சக்திமான் இந்த உரையாடலை திரை மறைவாய் அமர்ந்தபடி கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது மற்றுமொரு அதிகாரி உள்ளே நுழைந்தார்.

“சார்.. நீங்க சொன்னது போலவே குண்டுவெடிப்பு பத்தி நம்ம டீம் ரிசர்ச் பண்ணுனதுல அதுல இருந்த ஆயுதங்கள் யார் தயாரிச்சதுன்னு கண்டுபிடிக்க முடியலை. அதுபோல ஆயுதங்கள் ஸ்டார்க் இண்டஸ்ட்ரீஸ் உட்பட நிறைய ஆயுத கம்பெனிகள் வசம் இருக்கு”

ஆலன் பெரிதாய் எதிர்பார்க்க அதிகாரியின் பதிலால் ஏமாற்றம் அடைந்தார்.

”ஆனா.. வித்தியாசமான ஒரு பொருள் கிடைச்சிருக்கு சார்.. அதுல இருந்து அதிகமான பவர் சோர்ஸ் வெளிப்படுறதா சொல்றாங்க” என்றபடி கண்ணாடி குடுவைக்குள் இருந்த ஒரு கல்லை காட்டினார் அதிகாரி. ஆலன் அதை வாங்கி பார்த்தார்.

அதிகாரி சென்றதும் திரை மறைவிலிருந்து வெளியே வந்த சக்திமான் அந்த கல்லை வாங்கி பார்த்தார். “க்ரிப்டோனைட்” என்று சொல்லிக் கொண்டார்.

பிறகு ஆலனிடம் “லெக்ஸ் லூதர்.. நீங்க உடனே லெக்ஸ் லூதரை தேடியாகணும். அந்த ஸ்பேஸ்ஷிப் எங்க போனுச்சுன்னு ட்ரேஸ் பண்ண பாருங்க” என்றபடி நகர தொடங்கினார் சக்திமான்.

“நீங்க எங்க போறிங்க மிஸ்டர் சக்திமான்?” என்றான் பென்

“நமக்கு ஒரு ஆபத்தான ஆயுதம் தேவை.. அதை தேட போறேன்” என்றவர் சூறாவளி போல சுற்றி மறைந்தார்.

தொடரும்

Leave a comment