Category Archives: Comics Reviews

பிஸ்டலுக்கு பிரியாவிடை

வன்மேற்கு (வைல்ட் வெஸ்ட்) கதைகள் என்று சொன்னாலே முதலில் நியாபகம் வருவது அழுக்கு கௌபாய்கள் (மாடு மேய்க்கிறவைங்க). அடுத்தது துப்பாக்கி! சில நூற்றாண்டுகளாக பல கோடி உயிர்களை பலி வாங்கியுள்ள மோசமான ஆயுதம்.

அமெரிக்க சட்டத்திட்டங்கள் ஆரம்பத்திலிருந்தே கொஞ்சம் குடாக்குத்தனமானவை. நீங்கள் ஒரு ஆளை சுட்டால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஒரு ஜோடி குதிரைகளை திருடிவிட்டால் தூக்கில் போட்டு விடுவார்கள். அல்லது உங்களுக்கு ஒரு விலை நிர்ணயம் செய்து வெகுமதி வேட்டயர்களை ஏவி விடுவார்கள். வன்மேற்கின் சட்டத்திட்டங்களில் இருந்து, வாழ்க்கை முறை வரைக்கும் துப்பாக்கி பல வித மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அப்படிப்பட்ட துப்பாக்கி கலாசாரத்தை மொத்தமாக துடைத்தெறிய கிளம்பும் மனோபாலா அளவுக்கு பாடியான ஒரு வக்கீலின் கதைதான் “பிஸ்டலுக்கு பிரியாவிடை”.

ஒட்டு மொத்த அமெரிக்காவின் மோசமான பக்கங்களை பல இடங்களில் பகடி செய்து கொண்டே செல்கிறார்கள் அந்த கதையில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும்! முக்கியமாக செவிந்தியர்களுக்கு அமெரிக்கா செய்த ஒவ்வொரு துரோகத்தையும், செவ்விந்தியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டத்தையும் ஆங்காங்கே கதையில் சொல்லி இருக்கிறார்கள். முழுக்க முழுக்க காமெடியாக பயணிக்கும் இந்த கதையை பற்றி சுருக்கமாக எழுதி படித்து பார்த்தால் “ஜாங்கோ” போல சீரியஸான ஒரு கதையாக தெரியும். அதனால் கதையை விளக்க முயற்சிப்பது அர்த்தமற்றது.

ஆனால் காலம் காலமாக அமெரிக்காவில் செவ்விந்தியர்களுக்கும், கறுப்பின மக்களுக்கும் நிறைவேற்றப்பட்ட கொடுமைகளை பற்றியும், சட்டம் எப்படியெல்லாம் மேல்வர்க்கத்தினருக்கு உதவியது என்பது பற்றியும் படிப்பவருக்கு புரியும் வண்ணம் நகைசுவையாக சொல்லியிருக்கிறார்கள்.

உதாரணமாக ஒரு செவ்விந்திய சிறுமி இன்னொரு செவ்விந்திய பெண்ணிடம் வாஷிங்டன் சதுக்கத்தில் இருக்கும் சுதந்திர தேவி சிலையை காட்டி அது என்னவென்று கேட்பாள். அதற்கு பதில் தெரியாத அந்த பெண் “அது வெள்ளையர்களோட கடவுளா இருக்கும். பாரு அது தலையில் மலர் வளையம் மாதிரி இருக்கு” என சொல்வாள்.

உடனே அருகிலிருக்கும் வெள்ளைக்கார காவலன் ” இல்லை.. அதுதான் அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை” என்பான்.

இடைமறித்து கறுப்பின ஆசாமி ஒருவர் “ஆமாம்.. சுதந்திர தேவி சிலை. ஆனா அதை கட்டினது அடிமைகளை வெச்சுதான்” என்று பதில் அளிப்பார்.

அமெரிக்காவின் சுதந்திரம், ஜனநாயகம் எல்லாம் பூர்விக மக்களின் எலும்பு கூடுகள் மீதும், கருப்பினத்தவரின் ரத்ததாலும்தான் கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றன என்று சொல்லாமல் சொல்லும் காட்சிகள் அவை.

இதுபோல கதை முழுவதுமே ஒரு தீவிரமான அரசியல் பகடித்தான். சிரிக்க வைக்கும் அதே நேரம் சிந்திக்கவும் வைக்கும். 4 பாகம் கொண்ட இந்த கதையை படித்து முடித்த போது “டாவின்சி கோட்” மாதிரியான ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லரை பார்த்து முடித்த உணர்வு..

கதையின் இறுதியில் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது இரண்டு விஷயங்கள். ஒன்று, துப்பாக்கி – மனிதாபிமானமற்ற ஆயுதம். இரண்டு, சட்டம் – துப்பாக்கியை விட பலமான ஆயுதம். இரண்டுமே உபயோகிப்பவரின் வலிமையை பொறுத்து எதிராளி மீது பலமாக பாய்கிறது.