சூப்பர்மேன் வெர்சஸ் சக்திமான் பகுதி – 2

ஆஜ் கி ஆவாஸ் அலுவலகத்தில் லூயிஸ் லேனுடன் கீதா விஸ்வாஸ் டாக்குமெண்ட்ரி குறித்து பேசிக் கொண்டிருந்தாள்.

“க்ளிண்டன் வல்லரசு நாடுகள் எத்தனைக்கோ பயணம் போறார். ஆனா அவர் இந்தியா வரது பத்தி டாக்குமெண்டரி எடுக்க ஏன் ஆர்வம் காட்டறீங்க?” கீதா சந்தேகமாக கேட்டாள்.

“டாக்குமெண்டரின்னா நாம இதை படமா எடுக்க போறதில்லை கீதா. அமெரிக்க அதிபர் இங்க வரது ஒரு பெரிய அரசியல் மாற்றம். இது எதிர்காலத்துல என்ன மாற்றங்களை ஏற்படுத்தலாம்னு நம்ம ஆராய வேண்டியிருக்கு. ஒரு சிறப்பு இதழ் வெளியிடுற அளவுக்கு! கடைசியா ஒரு அமெரிக்க அதிபர் எப்போ இந்தியா வந்தார்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா கீதா?”

”ம்ம்.. 1978ல கரெக்டா?”

”ஆமா.. 22 வருஷத்துக்கு அப்புறம் ஒரு அமெரிக்க அதிபர் இந்தியா வரார். அதுவும் இந்தியா – பாகிஸ்தான் போர் முடிஞ்சிருக்க இந்த சமயத்துல..”

லூயிஸ் லேன் சொன்னதை கேட்டதும் கீதாவிற்கு வேறு சில யோசனைகள் மனதில் தோன்றின. அப்போது தொந்தரவு செய்வது போல ஒரு குரல் குறுக்கிட்டது.

”கீதா மேடம்.. என்னைய திட்டிக்கிட்டே இருப்பீங்களே! இன்னைக்கு எவ்வளவு பெரிய காரியம் பண்ணியிருக்கேன் பாத்தீங்களா..?”

தினசரி நாளிதழ் ஒன்றை கையில் விரித்து பிடித்தபடி உள்ளே நுழைந்தார் கங்காதர். கீதா யோசனையை அவர் குழப்பி விட்டார் என்பது கீதாவின் கோப கண்களில் தெரிந்தது.

”இங்க பாருங்க.. லூயிஸ் லேன் நீங்களும் பாருங்க”

கீதா பேப்பரை வாங்கி பார்த்தாள் “சாலையை கடக்க மூதாட்டிக்கு உதவிய ஆசாமி!”

“அந்த ஆசாமி யார் தெரியுமா? சாட்ஷாத் இதே கங்காதர் ஓம்கர்நாத் சாஸ்திரிதான் கீதா மேடம். நம்ம பத்திரிக்கை கூட என்னை பத்தி நியூஸ் போடலை ஆனா இவங்க போட்டிருக்காங்க பாருங்க”

“மிஸ்டர் கங்காதர் இந்த நியூஸ நீங்க முழுசா படிக்கலை. தலைப்புக்கு கீழ கொஞ்சம் பாருங்க”

கங்காதர் வாங்கி பார்த்தார் “பேருந்தில் ஏற காத்திருந்த மூதாட்டியை சாலையின் மறுபக்கம் கொண்டு போய் விட்டதால் மூதாட்டி ஆத்திரம்”

“இது என் தப்பு இல்ல கீதா மேடம். அவங்கதான் பஸ் ஸ்டாப்புல நின்னு ரோட்டையே பாத்துட்டு இருந்தாங்க”

கங்காதரின் பாவனையை கண்டு லூயிஸ் லேனுக்கே சிரிப்பு வந்துவிட்டது. ஆனால் க்ளார்க் கெண்ட் சந்தேகத்தோடே கங்காதரை பார்த்தான். “இந்த ஆள் ரொம்ப நடிக்கிறார்” என மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

“நேரத்தை வீணடிக்காதீங்க கங்காதர்” கீதா பேப்பரை மேசை மேல் வீசினாள். அப்போது டிஸ்கஷன் அறையிலிருந்த டிவியில் முக்கிய செய்திகள் ஒளிபரப்பாக தொடங்கியது.

”முக்கிய செய்திகள். டெல்லியில் வானத்தில் வித்தியாசமான உருவம் தெரிந்ததாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அது ஏலியன்களின் பறக்கும் தட்டு போல இருந்ததாக சிலர் தெரிவித்துள்ளனர்.”

அதை கேட்டதும் க்ளார்க் கெண்ட்டுக்கு பொறி தட்டியது. உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேறினான். ஆனால் டிவி செய்தியில் மூழ்கியிருந்தவர்கள் அந்த வெளியேற்றத்தை கவனிக்கவில்லை, கங்காதர் ஒருவரை தவிர..

”செய்தி கிடைக்கலைனா நம்மாட்கள் சிலசமயம் இந்த மாதிரி ஏதாவது ஏலியன், மாய மந்திரம்னு கிளம்பிடுறாங்க!” சலித்துக் கொண்டாள் கீதா.

”மாயமந்திரம் பத்தி தப்பா சொல்லாதீங்க கீதா மேடம்… எங்க ஊர்ல கூட சாமியார் ஒருத்தர்..” என கங்காதர் பேச தொடங்க லூயிஸ் குறுக்கிட்டாள்.

”இது ஏதோ தப்பா தெரியுது. எப்படியிருந்தாலும் நாம டெல்லி போக வேண்டிய அவசியமிருக்கு. சோ.. இப்பவே கிளம்பலாம்” என்றாள் லூயிஸ்.

“என்ன ஏலியன் ஷிப்னு சொன்னதும் அவ்ளோ பரபரப்பாயிட்டீங்க?”

“இந்தியாவுல வேணும்னா ஏலியன் கட்டுக்கதையா இருக்கலாம். அமெரிக்காவுல 100க்கு 90 பேர் ஏலியனை நம்புறவங்க. நான் 90ல ஒருத்தி”

”சரி நீங்க ரெண்டு பேரும் டெல்லி போய் க்ளிண்டன பாத்துட்டு வாங்க. அவர் மும்பையை சுத்தி பாக்க வரப்ப நான் பெர்சனலா போய் அவரை பாத்துக்குறேன்” நழுவ முயற்சித்தார் கங்காதர்.

“கங்காதர் நீங்களும் எங்க கூடதான் வறீங்க. ஆமா கெண்ட் எங்க போனார்” கீதா சுற்றும் முற்றும் பார்த்தாள்.

“ஆமா கெண்ட்.. எங்க போனார்! நீங்க முன்னாடி போங்க நான் அவரை அழைச்சிக்கிட்டு.. என் கேமராவுக்கு ப்லிம் ரோல் வாங்கிட்டு வந்துடுறேன்” பழைய மாடல் கோடக் கேமராவை காட்டி பல் இளித்தார் கங்காதர்.

”சரி.. எப்படியோ ரெண்டு பேரும் கிளம்பி வந்தா சரி. உங்களுக்காக ஏற்போர்ட்ல வெய்ட் பண்றோம்” என்றவாறு லூயிஸுடன் கிளம்பினாள் கீதா.

அதுவரை பல் இளித்துக் கொண்டிருந்த கங்காதர் முகம் சற்று கடுமையாக மாறியது. யாரும் இல்லாத அந்த அறையில் கையை உயர்த்தி ஒரு முறை சுற்றினார். மெல்ல மெல்ல வேகமாக சுற்ற தொடங்கிய அவர் சுற்றிவிட்ட பம்பரம் போல வேகமாக சுழன்றபடி அங்கிருந்து மறைந்தார்.

டெல்லியில் சுற்றுலா பயணிகளிடையே திடமான கோர்ட் சூட்டோடு நின்று கொண்டிருந்தான் க்ளார்க் கெண்ட். அங்குள்ள கார்ப்பெட் வியாபாரி ஒருவரிடம் ஏலியன் விண்கலனை பார்த்தது குறித்து விசாரித்துக் கொண்டிருந்தான். அப்போது வானம் மெல்ல இருட்டத் தொடங்கியது.

”இப்படிதான் சார் அனைக்கும் இருட்டுனுச்சு..” சொன்னபடி வானத்தை பார்த்தான் கார்ப்பெட் வியாபாரி. தூறல் போட தொடங்கவும் கார்ப்பெட் வியாபாரி ஒதுங்குவதற்கு இடம் தேடி ஓடினான். க்ளார்க் உற்று நோக்கியபோது வானத்தில் விண்கலம் போன்ற ஒன்று மேகங்களுக்கு இடையே மங்கலாக தெரிந்தது. அதை பார்த்ததும் க்ளார்க் ஒரு முட்டு சந்தை நோக்கி வேகமாக ஓடினான். ஆளிள்ளாத அந்த சந்தில் ஓடி சென்று சட்டையை கிழித்தான். அமெரிக்க மக்களுக்கு அதிகம் பழக்கமான அந்த “எஸ்” முத்திரை புடைத்துக் கொண்டு தெரிந்தது.

தொடரும் 

Leave a comment