சூப்பர்மேன் VS சக்திமான் – பகுதி-3

பனி போர்த்திய இமாலய மலைத்தொடர்களின் இடையே சூரியன் மறைய போவதை உணர்த்தும் விதமாக ஆரஞ்சு நிற ஒளியை வீசிக்கொண்டிருந்தது. மலைத்தொடங்களுக்கு நடுவே சிறு குன்றின் மீது அமைந்திருந்தது அந்த மடாலயம். முன்புற திடலில் இன்னமும் மாணவர்கள் பயிற்சி செய்து கொண்டிருந்தனர், ஒரு மாணவனை தவிர! மடாலயத்திற்குள் தலைமை குரு கெல்சாங் மாலை வேலை பூஜையை மேற்கொண்டிருந்தார். அவருக்கு அருகில் மண்டியிட்டு அமர்ந்திருந்தான் யோதா. அவனுக்கு பின்னால் கைகளில் கட்டு போட்டுக்கொண்டு இரு மாணவர்கள் நின்றிருந்தனர்.

”ஏன் அவர்களை மூர்க்கமாக தாக்கினாய் யோதா?”

”குருவே அவர்கள்தான் என்னிடம் தேவையின்றி வம்பு செய்தனர். ஆனால் நான் அவர்களை தாக்கவில்லை”

கெல்சாங் கடுமையாக பேசினார் ”அவர்களை நீ தாக்கவில்லை என்றால் அவர்களை அவர்களே தாக்கி கொண்டார்களா?”

அடிப்பட்ட சிறுவர்கள் இருவரும் தங்களுக்கு உள்ளூர சிரித்துக் கொண்டனர்.

“நீ இன்று இரவு முழுவதும் மடாலய காவல் பணியை காவல் தூணிலிருந்து நீ மேற்கொள்ள வேண்டுமென தண்டனை அளிக்கிறேன்” குரு கெல்சாங் மிகவும் கண்டிப்பாக சொன்னார். மேலெழுந்த ஆத்திரத்தால் யோதாவின் கண்கள் கொப்பளித்தன. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கண்கள் கலங்க வேகமாக வெளியேறினான்.

இன்று டெல்லியில்..!

கருமேக கூட்டத்திற்கு இடையே அரவமின்றி மறைந்திருந்தது அந்த விண்கலம். விண்கலத்தின் உள்ளே சிலர் பேரழிவுக்கான வேலைகளை தீவிரமாய் செய்துக்கொண்டிருந்தனர். விண்கலத்தின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து சகல பகுதிகளுக்கும் பிறப்பிக்கப்படும் கட்டளைகள் ஸ்பீக்கரில் ஒலித்துக் கொண்டிருந்தன. கலத்தின் முகப்பு கண்ணாடி வழியாக கீழே தெரிந்த நிலப்பரப்பை பார்த்துக்கொண்டிருந்தான் கொடூர திட்டங்களை செய்யும் டாக்டர் ஜக்கால்.

“டாக்டர் ஷிப்புக்கு வலதுபக்கமா சக்தி வாய்ந்த ஏதோ ஒன்னு நம்மள நோக்கி வருது” கட்டுப்பாட்டு அறையிலிருந்து வந்த செய்தி டாக்டர் கையிலிருந்த வாக்கிடாக்கியில் ஒலித்தது.

”அது என்னவா இருந்தாலும் சரி.. அதை உடனே அழிச்சிடுங்க! பவ்வ….ர்!” என்றபடிக்கு கோவமாக விண்கலனின் வலதுபக்க கேமராவை பார்த்தான் டாக்டர்.

அதில் மின்னல் வெட்டு போன்ற ஒளித் தெரிந்தது. அடுத்த நொடியே விண்கலம் தறிக்கெட்டு குலுங்க தொடங்கியது. சில துப்பாக்கி முழக்கங்கள் கேட்டன. பிறகு சில நிமிடங்கள் ஸ்பேஷ் ஷிப்பே பேய் வீடு போல கனத்த அமைதியானது. பிறகு திடீரென ஒவ்வொருவராக அலறும் சத்தம் கேட்க தொடங்கியது..

கீழ் தளத்திலிருந்து ”கர்ர்// க்ரீச்ச்ச்..யாரோ கீழ்தளத்தை தாக்கிருக்காங்க..க்ரீச்ச்ச்… டீம் 109 உடனே உதவி தேவை”

டீம் 109 ஆயுதங்களோடு சென்ற போது கீழ் தளத்தில் சிலர் அடிப்பட்டு கிடந்தார்கள். உடனடியாக அடிபட்டு கிடந்தவர்களை ஒரு குழு மீட்க தொடங்கியது. மற்றொரு குழுவினர் துப்பாக்கியை தயார் நிலையில் முன்னால் நீட்டியபடி எது தங்கள் கலத்தை தாக்கியது என்று டீம் 109 தேட தொடங்கினர்.

”டாக்டர் கீழ் தளத்தை எது தாக்குனுதுன்னு தெரியலை. இங்க எதையும் காணோம்”

கட்டுப்பாட்டு அறையிலிருந்து “நல்லா பாருங்க சோல்ஜர்ஸ். அது உங்களுக்கு பின்னால ஏதோ தெரியுது!”

கீழ்தளத்தில் உடைந்து போயிருந்த மின்விளக்குகளில் சில மின்னிக்கொண்டிருந்தன. 109 வீரர்கள் குழு பின்னால் திரும்பி பார்த்தது. இருட்டு பகுதியில் இருந்து அக்னி சிவப்பாக இரண்டு ஒளிரும் கண்கள் தெரிந்தன.

கட்டுப்பாட்டு அறையில் உள்ள ஸ்பீக்கரில் துப்பாக்கி சத்தங்கள் தொடர்ந்து கேட்டன. பிறகு பெரும் அமைதி நிலவியது. பிறகு 109 குழுவினர் உயிர் பயத்தில் அலறும் சத்தம் கேட்க தொடங்கியது.. கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் பீதியில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு மீண்டும் பேரமைதி நிலவியது.

அந்த அமைதி டாக்டருக்கு கிலியை ஏற்படுத்தியது. அப்போது தனக்கு பின்னால் ஒரு உருவம் நிற்பதை டாக்டர் உணர்ந்தான். திரும்பி பார்த்தபோது நீல நிற உடுப்பில் “எஸ்” முத்திரையுடன் கனல் கக்கும் பார்வையுடன் நின்று கொண்டிருந்தார் சூப்பர்மேன். அவரை பார்த்ததும் டாக்டரின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன. தன்னை அறியாமலே “பவர்” என்று சொல்லிக்கொண்டான்.

”நீ யாரு?” சூப்பர்மேனின் கேள்வியால் நினைவுத் திரும்பினான் டாக்டர்.

”ஓ.. நீங்க.. நீங்க சூப்பர்மேன்தான.. நாங்க இங்க எந்த பிரச்சினையும் பண்ண வரல. எங்க ஷிப் இங்க கொஞ்சம் ரிப்பேர் ஆச்சு.. அவ்ளோதான் மிஸ்டர்.சூப்பர்மேன்” வழக்கம்போல சமாளிக்க தொடங்கினான் டாக்டர்.

“நான் கேட்டது உனக்கு புரியலையா? யார் நீ?” சூப்பர்மேன் கண்கள் சிவந்தன.

“கோ..கோபப்படாதீங்க..நான்.. நான் ஒரு டாக்டர்” என்றபடி கையில் வைத்திருந்த ரிமோட் ஒன்றை இயக்க தயாரானான் ஜக்கால்.

”என்பேரு டாக்டர்.ஜக்கால்” என்றபடி பட்டனை அழுத்தினான்.

சூப்பர்மேன் உஷார் ஆவதற்குள் அவருக்கு பின்னாலிருந்து பச்சை நிற ஒளி அவரை தாக்கியது. அவர் நிதானம் தவறி தரையில் மண்டியிட்டார். உடனே மீண்டும் ஒரு பட்டனை அழுத்தியபடி “பவர்ர்ர்ர்” என கத்தினான் டாக்டர் ஜக்கால்.

சூப்பர்மேன் நின்றிருந்த பகுதி சடாரென மூடியது. அவர் விண்கலனிலிருந்து தூக்கி வீசப்பட்டார். மின்னல் வேகத்தில் ஜக்காலின் விண்கலம் அந்த இடத்தை விட்டு அகன்றது. கதிர்வீச்சால் மூளை குழம்பியிருந்த சூப்பர்மேன் வானத்திலிருந்து விழுந்து கொண்டிருந்தார். சுயநினைவு பெற்று அவர் பறக்க முயற்சித்த நேரத்தில், பம்பரம் போல சுழன்று வந்த ஒன்று சூப்பர்மேனை மோதி மீண்டும் வானத்தை நோக்கி வீசியது.

_ தொடரும்

Leave a comment