சூப்பர்மேன் வெர்சஸ் சக்திமான் – பகுதி 1

ஓமனுக்கும், இந்தியாவிற்கும் இடையே பரந்து விரிந்த அரபிக்கடல் பகுதியில் விரைந்து கொண்டிருந்தது கப்பல் ஒன்று. கப்பலின் மேற்பரப்பில் துப்பாக்கி சகிதம் ஆட்கள் சிலர் பாதுகாப்பிற்கு நின்று கொண்டிருந்தனர். வீசும் கடல்காற்றை கிழித்துக் கொண்டு கப்பலில் வந்திறங்கியது ஹெலிகாப்டர் ஒன்று. அதிலிருந்து கோட் சூட் போட்ட திடகாத்திரமான ஆசாமி ஒருவன் இறங்கி உள்ளே சென்றான்.

”சார்.. ஹார்பர்ல கப்பலை நிறுத்துறதுக்கு பெர்மிஷன் வாங்கியாச்சு.. இல்லீகல்தான். கப்பல் ரிப்பேர் சரி பண்ண ஒரு வார காலம் ஆகும்னு சொல்லிருக்கேன்”

திடகாத்திர ஆசாமி சொல்லிக் கொண்டிருக்க அறையின் நிழலில் இருந்து வெளி வந்தது அந்த உருவம், மொட்டை தலையுடன், கண்களில் விஷமத்துடன்.. லெக்ஸ் லூதர்தான் அது.

‘வெல் டன் ஜேம்ஸ்.. ஒரு வாரம் போதும்.. என் திட்டத்தை செயல்படுத்த..!”

அப்போது மற்றொரு குரல் குறுக்கிட்டது.

“என்னது உன் திட்டமா? நம்ம திட்டம்னு சொல்லு..” முன்னாள் சுருண்டு விழும் முடி, குறுந்தாடியுடன் கண்ணை பறிக்கும் வண்ணத்தில் கோர்ட் அணிந்திருந்த அந்த நபர் கத்தினான் “பவர்ர்ர்…”

அமெரிக்காவின் மெட்ரோபோலிஸ் நகரம் வழக்கம்போல சுறுசுறுப்பாக இயக்கி கொண்டிருந்தது. அலுவலகத்திற்கு நேரமாகி விட்டதை உணர்ந்தபடி க்ளார்க் கெண்ட் வேகமாக மாடிப்படிகளில் ஏறி சென்று “டெய்லி ப்ளானட்” அலுவலகத்துக்குள் நுழைந்தான்.

“வாப்பா கெண்ட்.. இன்னைக்காவது ஏதாவது உருப்படியான நியூஸ் வெச்சிருக்கியா?” வந்த உடனே கேள்விகளால் துழைத்தார் சீஃப் எடிட்டர் பெர்ரி வொயிட்.

”ம்ம்.. அதுவந்து.. நகரத்துல கட்டபோற புது பூங்கா பத்தி..” சமாளிக்க முயன்று கொண்டிருந்தான் க்ளார்க்.

”நீ பூங்கா பத்தியும் எழுத வேணாம்.. தேங்காய் பத்தியும் எழுத வேணாம்.. என் கேபினுக்கு வா” என்று சொல்லிவிட்டு வேகமாக போனார். க்ளார்க் மெதுவாக பின் தொடர்ந்து சென்றான்.

பெர்ரி கேபினில் ஏற்கனவே லூயிஸ் லேன் காத்துக்கொண்டிருந்தாள். அவளை பார்த்ததும் க்ளார்க் மெல்ல சிரித்துவிட்டு கண்ணாடியை சரி செய்து கொண்டான்.

“உங்க ரெண்டு பேரையும் ஏன் வர சொன்னேன்னு சுருக்கமா சொல்லிடுறேன். ஏன்னா நமக்கு நேரம் இல்ல. நீங்க ரெண்டு பேரும் உடனே இந்தியா போயாகணும்”

க்ளார்க், லேன் இருவரும் வியப்புடன் சீஃபை பார்த்தார்கள்.

அவர் தொடர்ந்தார் “யூ.எஸ் பிரெசிடண்ட் க்ளிண்டன் அடுத்த வாரம் இந்தியா போக இருக்கார். அதுக்கு முன்னால நீங்க அங்க போய் இதுபத்தின டாக்குமெண்ட்ரி ஒன்னு ரெடி பண்ணனும். இந்தியா அமெரிக்கா இடையேயான உறவு நிலையில இது முக்கியமான சந்திப்பு. இன்னைக்கு நைட்டே நீங்க கிளம்புறீங்க”

லேன் குறுக்கிட்டாள், “இப்படி டக்குன்னு போக சொன்னா எப்படி? அங்க எங்களுக்கு யாரையும் தெரியாது….”

அவள் சொல்லி முடிப்பதற்கு சீஃப் தொடர்ந்தார் “இந்தியாவுல இருக்க ஆஜ் கி அவாஸ் பத்திரிக்கை உங்களுக்கு தேவையானதை செஞ்சு கொடுப்பாங்க. உங்களுக்கு தேவையான பொருட்கள எடுத்துக்கிட்டு கிளம்புற வழிய பாருங்க” சொல்லிவிட்டு வேகமாக போய்விட்டார்.

”இந்தியா போறது ஒரு வித்தியாசமான அனுபவமா இருக்க போகுது” க்ளார்க் கெண்ட் ஜன்னல் வழியே வானத்தை பார்த்து சொல்லிக்கொண்டிருந்தான்.

பரபரப்பான மும்பை நகரத்தின் ஆசாத் மைதானத்தின் கிழக்கு பக்கத்தில் அமைதியாக குடிக்கொண்டிருந்தது “ஆஜ் கி அவாஸ்” பத்திரிக்கை அலுவலகம். உள்ளே பலரும் சுறுசுறுப்பாக பணியாற்றி கொண்டிருக்க ஒரு ஆள் மட்டும் கும்ப கர்ண தூக்கம் போட்டு கொண்டிருந்தார். அவரது குறட்டை சத்தம் ஆபீஸ் முழுக்க எதிரொலித்துக் கொண்டிருந்தது.

”ஹலோ மிஸ்டர் கங்காதர்.. வீட்டுல தூங்க உங்களுக்கு நேரமில்லையா என்ன?” சீஃப் எடிட்டர் சத்யபிரகாஷ் தனக்கே உரிய கிண்டலுடன் கேட்டார்.

அவரின் குரலை கேட்டு துள்ளி எழுந்தார் கங்காதர் “இல்ல சார்.. நான் தூங்கவே இல்ல.. எல்லா நேரமும் சக்திமான எப்படி போட்டோ எடுக்கலாம்னுதான் யோசிச்சிட்டு இருக்கேன். இப்பக்கூட கண்ணை மூடி அதைதான் யோசிச்சிட்டு இருந்தேன்”

“பரவாயில்லை கங்காதர் இனிமேல் நீங்க அதைபத்தி யோசிக்க வேணாம். நமக்கு வேற ஒரு முக்கியமான வேலை இருக்கு” கீதா விஸ்வாஸ் உள்ளே நுழைந்தாள்.

”யூ.எஸ் ல உள்ள டெய்லி ப்ளானட் பத்திரிக்கையில் இருந்து நம்ம நாட்டுக்கு ரெண்டு பத்திரிக்கைக்காரங்க வராங்க. அவங்களோட கீதாவும், நீயும் போய் டாக்குமெண்டரிக்கு அவங்களுக்கு தேவையான உதவிய செய்ங்க! புரிஞ்சதா கங்காதர்?” மூஞ்சை கடுமையாக வைத்துக்கொண்டு கேட்டார் சூர்யபிரகாஷ்.

“சார் டாக்குமெண்டரி எடுக்க நாங்க ஏன் போகணும்? போரடிக்கும். சினிமா ஸ்டார்ஸ இண்டர்வியூ பண்ண அனுப்புனீங்கன்னா நாலு போட்டோவாவது எடுத்துட்டு வருவேன்” வழக்கம்போல மொக்கை ஜோக் அடித்துவிட்டு சிரித்துக் கொண்டிருந்தார் கங்காதர்.

அப்போது க்ளார்க் கெண்ட்டும், லூயிஸ் லேனும் அலுவலகத்திற்குள் நுழைந்தார்கள். “வாங்க மிஸ்டர்.கெண்ட் அண்ட் மிஸ்.லூயிஸ்” என்றபடி அவர்களை உள்ளே வரவேற்றார் சூர்யபிரகாஷ்.

“இவங்கதான் உங்க டாக்குமெண்ட்ரிக்கு ஹெல்ப் பண்ண போற ரிப்போர்டர் மிஸ்.கீதா விஸ்வாஸ். அப்புறம் இவர் போட்டோகிராஃபர் கங்காதர்”

“இல்லை கங்காதர் இல்ல. பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்கர்நாத் சாஸ்திரி. அதான் என் முழு பேரு”

”இவர் இப்படிதான் கொஞ்சம் காமெடியா பேசுவார். நீங்க கங்காதர்னே கூப்பிடலாம்” கீதா லூயிஸிடம் விளக்கிக் கொண்டிருந்தாள்.

கங்காதருக்கு க்ளார்க் கெண்ட்டை பார்த்த மாத்திரத்திலேயே மனதிற்கு ஏதோ தவறாய் பட்டது. “இவன் மனிதன் போல தெரியலையே” என மனதுக்குள் நினைத்தவர் அவனை ஊடுருவி பார்த்தார். இவன் கண்டிப்பாக மனிதன் இல்லை, ஏதோ சதி இருக்கிறது என யோசித்தார். க்ளார்க் கெண்ட்டும் கங்காதரை எக்ஸ்ரே செய்து பார்க்க முயற்சி செய்தான். ஆனால் அவனால் ஊடுறுவ முடியவில்லை. எதிரே இருப்பது சாதாரண ஆசாமி இல்லை என்பதை க்ளார்க் உணர்ந்தான்.

“வெல்கம் டூ இந்தியா மிஸ்டர்.கெண்ட்” கை கொடுத்த கங்காதர் முகத்தில் கொஞ்சம் கடுப்பு தெரிந்தது. அதே கடுப்புடன் “தாங்க்ஸ்” என்றான் கெண்ட்

தொடரும்

#SupermanVsSakthimaan

#Yugen

Leave a comment