Tag Archives: Jack Kirby

ஜாக் கிர்பி: கூட்டுக்குள் அடங்காத பறவை

ஜாக் கிர்பியை வெறுமனே மார்வெலுக்கு வேலை செய்தார், டிசிக்கு வேலை செய்தார் என்று மட்டும் ஒதுக்கிவிட முடியாது.  அப்படி ஒதுக்கிதான் அவருக்கு கொடுக்க வேண்டிய அங்கிகாரம் எதையும் கொடுக்காமல் ஏமாற்றினார்கள் என்று கூட சொல்லலாம்.

1917ல் இதேநாளில் பிறந்த ஜாக் கிர்பிக்கு இன்று 102வது பிறந்தநாள். ஸ்டான் லீயை பற்றி எழுதும்போதெல்லாம் “மார்வெல் காமிக்ஸின் பிதாமகன்” என்று குறிப்பிடுவார்கள். ஆனால் ஜாக் கிர்பியை அமெரிக்க காமிக்ஸ் பிதாமகன் என்று கூட சொல்ல முடியாது. அவர் காமிக்ஸில் மட்டும் பணியாற்றவும் இல்லை. காமிக்ஸ் ஆசிரியர், ஓவியர், கார்ட்டூன் எழுத்தாளர், இரண்டாம் உலகபோர் காலத்தில் போராளி என்று பன்முகத்தன்மையோடு செயல்பட்டவர் ஜாக்.

சூப்பர் ஹீரோ கதைகளை எழுதும்போது வெறுமனே சூப்பர் சக்திகள், சூப்பர் வில்லன்களை மட்டும் எழுதாமல் அதற்குள் ஒரு ஆழமான அரசியல் பார்வையையும் கொண்டு வருபவர் ஜாக் கிர்பி. முதல்முதலில் ஜாக் கிர்பி தனது பயணத்தை கார்ட்டூன் தொடர்களுக்கு படம் வரைவதன் மூலமே தொடங்கினார். புகழ்பெற்ற மற்றொரு காமிக்ஸ் ஆசிரியரான ஜோ சைமனுடன் இணைந்து பல கதைகளை உருவாக்கினார். டிசி கிரேக்க கடவுள்களின் பிரதிபலிப்பாக சூப்பர் ஹீரோக்களை உருவாக்கி கொண்டிருந்த காலம். விற்பனை ரீதியாகவும் அது பெரும் வெற்றி பெற்றிருந்தது. அப்போதெல்லாம் வைகிங் இனத்தை காட்டுமிராண்டி கூட்டமாகவே மேற்கத்திய வர்க்கம் நினைத்து கொண்டிருந்தது. அந்த காலத்திலும் வைக்கிங்களின் கடவுளான தோர், ஓடின் போன்றவர்களை மார்வெல் காமிக்ஸ்களில் கொண்டு வந்து வெற்றிபெற செய்தார்.

முதல் கறுப்பின சூப்பர் ஹீரோ என்று இன்றுவரை கொண்டாடப்படும் “பிளாக் பாந்தர்” கதாப்பாத்திரத்தை உருவாக்கினார். மார்வெலுக்காக ஹல்க், தோர், எக்ஸ் மேன், ஃபெண்டாஸ்டிக் ஃபோர் என பல கதாப்பாத்திரங்களை உருவாக்கினாலும், மார்வெல் என்னும் சின்ன வட்டத்திற்குள் சுற்றி வந்தவரல்ல கிர்பி. மார்வெல் டைம்லி காமிக்ஸ் என்ற பெயரில் இருந்த போது Mad magazine, Harvey Comics போன்றவற்றிற்கும் பல கதைகளை எழுதினார். பாப்பாய் தி செய்லர் மேன் கார்ட்டூனுக்கு ஜோ சைமனுடன் இணைந்து பணிபுரிந்தார்.

நாட்டுப்பற்று மிக்கவர் ஜாக் கிர்பி. இரண்டாம் உலக போர் சமயத்தில் தனது வேலைகளை விட்டுவிட்டு அமெரிக்க ராணுவத்திற்கு சேவை செய்ய போய்விட்டார். சவான்னா கேம்பில் பணியில் ஈடுபட்டிருந்த ஜாக் கிர்பியை பற்றி கேள்விபட்ட லெப்டினென்ட், அவருக்கு அந்த பகுதியின் வரைப்படம் தயாரிக்கும் பணியை அளித்தார்.

உலக யுத்தம் முடிந்து மீண்டும் தனது காமிக்ஸ் பணியை தொடங்கிய ஜாக் கிர்பியிடம் அரசியல் தாக்கம் அதிகமாகவே இருந்தது. 1970களில் மார்வெல் காமிக்ஸ் உயர்ந்த இடத்தை அடைந்திருந்தது. படைப்புகளின் நேர்த்தியை தாண்டி வெறுமனே சூப்பர் ஹீரோக்களை உருவாக்கி கொண்டிருப்பதாக ஜாக் கிர்பி கருதினார். மேலும் அவரை ஒரு கலைஞனாக அவர்கள் சரியான அங்கீகாரத்தை வழங்கவில்லை என்பது அவரது எண்ணமாக இருந்தது. மார்வெலில் இருந்து வெளியேறிய கிர்பி டிசியில் இணைந்தார்.

அப்போதுதான் இன்றுவரை கிர்பியின் மாஸ்டர் பீஸாக உலகம் புகழும் “நியூ காட்ஸ்” தொடரை உருவாக்கினார் கிர்பி. போஸ்ட் அபோகலிப்ஸ் ரக கதைகளை சோதித்து பார்க்க விரும்பிய கிர்பி “கமான்டி: தி லாஸ்ட் பாய் ஆன் எர்த்” என்னும் கதையையும் எழுதினார். அந்த கதை அவரது மற்ற சூப்பர் ஹீரோ கதைகளை போல இல்லாவிட்டாலும் அனைவராலும் கவனிக்க வேண்டிய ஒரு கதை.

இப்படி தொடர்ந்து அமெரிக்க காமிக்ஸிலும், கார்ட்டூனிலும் தனது ஆளுமையை செலுத்திய கிர்பிக்கு டிஸ்னி செய்ததுதான் மிக கேவலமான விஷயம். மார்வெலிடம் மொத்த உரிமைகளையும் வாங்கும்போது அதில் ஜாக் கிர்பி உருவாக்கிய எந்த கதாப்பாத்திரத்திற்காகவும் அவருக்கு காப்புரிமை தொகை தரவே இல்லை. இதுகுறித்து கிர்பியின் மகன் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். ஆனால் கிர்பி சம்பளம் பெற்றுக் கொண்டுதான் வேலை செய்தார் எனவும் அதனால் சூப்பர் ஹீரோக்களின் காப்புரிமையில் ஜாக் கிர்பிக்கு பங்கில்லை என்றும் மார்வெல் வாதிட்டது. நீதிமன்ற தீர்ப்பு மார்வெலுக்கு சாதகமாக இருந்தது. 2014ல் தொடரப்பட்ட மேல் முறையீட்டுக்கு பிறகே ஒரு கலைஞனாக, ஆசிரியராக ஜாக் கிர்பிக்கு அந்த கதாப்பாத்திரங்களில் உரிமை இருக்கிறது என தீர்ப்பு வெளியானது.ஒரு கலைஞன் தனது படைப்புக்காக உரிமை கேட்டு போராட நேர்ந்ததெல்லாம் மிகப்பெரிய அவலம்.

நிறைய எழுதினால் படிக்க சிரமப்படுவீர்கள் என்பதால் சுருக்கி எழுதியிருக்கிறேன். நன்றி!